இஸ்லாமியர்கள் இல்லாத கிராமம்… … மொகரம் பண்டிகையை கொண்டாடிய இந்து மக்கள்.. மதநல்லிணக்கத்தை போற்றும் காசாநாடு புதூர்!!

Author: Babu Lakshmanan
9 August 2022, 1:29 pm
Quick Share

தஞ்சை : இஸ்லாமியர் வசிக்காத தஞ்சையை அடுத்த காசாநாடு புதூர் கிராமத்தில், மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக, மொகரம் பண்டிகையை கிராம விழாவாக இந்துக்கள் சிறப்பாக கொண்டாடிய நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மொகரம் பண்டிகையையொட்டி காசாநாடு கிராமத்தில் இந்துக்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற 10 நாட்களுக்கு முன்பு விரதத்தை தொடங்கி, ஊரின் மையப் பகுதியில் உள்ள அல்லாசாமி கோவிலில் உள்ளங்கை உருவ பொருளை வைத்து பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி வழிபாடு நடத்தினர்.

மொகரம் பண்டிகையான இன்று பறை இசையுடன் பஞ்சா என்கிற அல்லா சாமி ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்து செல்லப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் புதிய மண் கலயத்தில் பானகம், அவல், தேங்காய், பழம் வைத்து, பஞ்சாரம் சுமந்து வருபவர் காலில் தண்ணீரால் கழுவி, அவர்கள் பாதத்தை தொட்டு வணங்கி எலுமிச்சை மாலை, பட்டு துண்டு போர்த்தி வழிபட்டனர்.

பஞ்சாரம் என்ற அல்லா சாமி செங்கரை சாவடிக்கு வந்ததும், பஞ்சாரம் சுமந்து வந்தவர்கள் தீ குண்டத்தில் முதலில் இறங்கினர். பின்னர், அவர்களை தொடர்ந்து மக்கள் தீ குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.

இது குறித்து விழா ஏற்பாட்டர்கள் கூறுகையில், “இஸ்லாமியரின் பண்டிகையான மொகரம் பண்டிகையை முஸ்லிம்கள் வசிக்காத இந்துக்கள் மட்டும் வசிக்கும், எங்களது ஊரில் முன்னோர்கள் வழிகாட்டுதலின்படி, தொடர்ந்து பாரம்பரியமாக 300 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது.

எங்கள் கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு குளம் வெட்டப்பட்டபோது, உள்ளங்கை உருவத்தில் உலோகம் கிடைத்தது. அது அல்லாவின் கையாக கருதி கோவில் அமைத்து வழிபாடு செய்து வருகிறோம். எங்கள் ஊரில் பிறந்த பெண்கள் அனைவரும் மொகரம் திருவிழாவின்போது பிறந்த வீட்டிற்கு வந்து பானகம் தயாரித்து அல்லாவுக்கு வழங்குவதை இன்றளவும் கடைபிடித்து வருகிறோம்,” என்றனர்.

Views: - 563

0

0