குழந்தைகள் கையில் கிடைச்சிருந்தா?.. குடியிருப்பு பகுதியில் சிதறிக் கிடந்த நாட்டு வெடிகளால் பீதி..!

Author: Vignesh
26 August 2024, 6:45 pm

நத்தம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், நத்தத்தில் குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகள் கிடந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் செந்துறைரோடு ஆர்.சி மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள கலைநகர் குடியிருப்பு பகுதியில் இன்று காலை அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் வழக்கமாக வேலைக்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தபோது சாலையின் அருகே உள்ள முள் புதருக்குள் 20க்கும் மேற்பட்ட சணலால் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் சிதறி கிடந்தது.

இதைப் பார்த்த, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் சிதறி கிடந்த நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து சென்றனர். மேலும், நாட்டு வெடிகள் சிதறிக்கிடந்த இடத்தின் அருகிலேயே அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகள் என்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று நத்தம் அருகே வெடி விபத்தில் உடல் சிதறி இருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குடியிருப்பு மற்றும் பள்ளிக்கு அருகிலேயே நாட்டு வெடிகள் கிடந்தது அப்பகுதி பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் நாட்டு வெடிகளை வீசி சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?