கிரஹப்பிரவேசத்தில் வந்த மொய்ப்பணம் ரூ.5.75 லட்சம் அபேஸ் : வீட்டை கட்டிய தொழிலாளிகளே கை வைத்தது அம்பலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2022, 2:11 pm
Theft - Udpatenews360
Quick Share

கோவை : காளப்பட்டியில் கிரகப்பிரவேசத்தில் வந்த மொய்பணம் ரூ.5.75 லட்சம் கொள்ளைபோன சம்பவத்தில் வீட்டை கட்டிய தொழிலாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்துள்ள காளப்பட்டி டைமண்ட் தாசன் அபார்ட் மெண்ட்டை சேர்ந்தவர் கெளதமன் (வயது 33). தனியார் நிறுவன உரிமையாளர்.

இவர் சமீபத்தில் காளப்பட்டி சிவா நகர் விரிவு பகுதியில் புதியதாக வீடு ஒன்றினை ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் வாங்கியுள்ளார். அன்றைய தினமே கிரகப்பிரவேசமும் நடைபெற்றுள்ளது.

கிரகப்பிரவேசம் முடிந்து மாலையில் உறவினர்கள் அனைவரும் சென்ற பின்னர் கெளதமனும், அவரது மனைவியும் செய்முறைப்பணம் வந்துள்ளதை எண்ணிப்பார்த்ததில் ரூ.5.75 லட்சம் இருந்துள்ளது.

அந்த பணத்தை கட்டிலில் வைத்து விட்டு கணவன், மனைவி இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். இதனை ஜன்னல் கண்ணாடி வழியாக அருகில் உள்ள வீட்டின் கதவை உடைத்து அதன் வழியே மாடி பால்கனி வழியாக சென்று திருடியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கெளதமன் கோவில்பாளையம் போலீசில் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் விளாங்குறிச்சி சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது,அவ்வழியே வந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளனர். அவர்களை விரட்டிப்பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் விழுப்புரத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி(வயது 20), கார்த்திக்(வயது 25) என்பதும் பணத்தை பறிகொடுத்த கெளதமனின் புதிய வீட்டில் கட்டிட பணிகளை மேற்கொண்ட தொழிலாளிகள் என்பதும், கதவை உடைத்து பணத்தை கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.5.75 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர்,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 384

0

0