ஒரே நாளில் ஒரே கல்லறையில் கணவன் மனைவி புதைப்பு!!

28 August 2020, 11:12 am
Kanyakumari Husband Wife - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்ததால் உறவினர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஒரே கல்லறையில் அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் (வயது 88). இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மாநில முதுநிலை கணக்கு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி மேரி செல்லம்மாள்(வயது 88). ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை ஆவார்.

இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். ஒரு மகன் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றினார். மற்ற இரண்டு மகன்களும் தனியார் நிறுவன ஊழியர்களாக உள்ளனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமன்புதூரில் டாக்டராக பணியாற்றிய இவர்களது மகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மகனை இழந்த வேதனையில் ஆல்பர்ட் மற்றும் அவரது மனைவி செல்லம்மாள் இருந்தனர். 

இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக நேற்று காலை ஆல்பர்ட் உயிரிழந்தார். அவரது மரணம் செல்லம்மாளை அதிர்ச்சி அடையச் செய்தது. இதுபற்றி அறிந்த மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

ஆனால் கணவன் இழந்த அதிர்ச்சியில் இருந்து செல்லம்மாவால் மீள முடியவில்லை. அவர் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தார். இந்நிலையில் இன்று காலை ஆல்பர்ட் உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்கள் அவரது உடலை எடுத்தனர்.

அப்போது கதறி அழுத செல்லம்மாள் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு செல்லம்மாளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. செல்லமாளை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இன்று காலையில் ஆல்பர்ட், செல்லம்மாள் ஆகியோரின் உடல்கள் உறவினர்களால் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பின்னர் ராமன்புதூரில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் ஒரே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டன. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 36

0

0