விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற கணவன்: மாமியார் வீட்டின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட காதல் மனைவி

Author: Udhayakumar Raman
31 July 2021, 9:24 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஊத்துக்கோட்டையில் கல்லூரியில் உடன் படித்த போது காதலித்து ஏமாற்றிதிருமணம் செய்து விட்டு விவாகரத்து கேட்ட கணவனுடன் சேர்த்து வைக்கக்கோரி பெண் மாமியார் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த பிஎஸ்சி படித்து வந்த மாணவி சித்ரா என்பவரும், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் மகன் பிரமோத் இருவரும் பொன்னேரி அரசினர் கலைக் கல்லூரியில் படிக்கும் போது இருவருக்கும் நட்பாகி, பின்னர் காதல் மலர்ந்து இருவரும் சென்னையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஊத்துக்கோட்டை அருகே உள்ளகாட்டுசெல்லியம்மன் கோவிலில் அம்மன் சிலை முன்பு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். பதிவு திருமணமும் செய்த நிலையில், வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துவிட்டு நடிகர் மாதவன் திரைப்பட பாணியில் அவரவர் வீட்டிலேயே வசித்தனர்.

இந்த நிலையில் வீட்டிற்கு விபரம் தெரிய வந்து. இருவரும் பின்னர் சென்னை மாதவரம் மாத்தூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வர குடும்பம் அமைதியாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனைவியை பிரிந்து வாழ விவாகரத்து கேட்டு பிரமோத் தரப்பில் முடிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி பிரமோத்தின் மனைவி சித்ரா தனது உறவினர்களுடன் வந்து ஊத்துக்கோட்டையில் உள்ள மாமியார் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

கணவன் தரப்பினர் தன் மீது வேண்டுமென்றே புழல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், வரதட்சணை கேட்டு தராததால் தன்னை விவாகரத்து செய்துவிட்டு அத்தை மகளை திருமணம் செய்து கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இது குறித்து பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கண்ணீர் மல்க தெரிவித்த அவர், தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி ஊத்துக்கோட்டையில் கணவரின் வீட்டின் முன்பாக தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 126

0

0