கணவரின் நண்பர் மனதில் ஓவியம் தீட்டிய ஓவிய ஆசிரியை : ஒரே ஒரு புகாரால் வெளிச்சத்திற்கு வந்த உல்லாசக் கதை!!!

25 February 2021, 5:07 pm
Husband Killed - Updatenews360
Quick Share

திருச்சி : கள்ளக்காதலுக்காக கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த ஓவிய ஆசிரியை போலீசார் கைது செய்துள்ள நிலையில், பெற்றோர்களை நம்பியிருந்த பிஞ்சுகள் நடுத்தெருவில் ஆதரவற்றிருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்துள்ள பி.மேட்டூரை சேர்ந்தவர் பழனிவேல் (வயது41). இவர்
நிலத்தரகராகவும், துறையூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி மோகனாம்பாள் (வயது 38), தா.பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஓவிய ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். பழனிவேலுக்கும் மோகனாம்பாலுக்கும் 15, வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

பழனிவேலுக்கும் மனைவி மோகனாம்பாள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கம். மோகனாம்பாள் கணவரிடம் அவ்வப்போது கோபித்து கொண்டு பெற்றோர் அல்லது தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கொண்டு குழந்தைகளுடன் சென்று விடுவது வழக்கம்.

கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மோகனாம்பாள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தா.பேட்டைக்கு குழந்தைகளுடன் குடி வந்துள்ளார். இந்நிலையில் பெரியோர்கள் செய்து வைத்த சமரசத்தின் பேரில் பழனிவேலு மனைவி மோகனாம்பாள் மற்றும் குழந்தைகளுடன் தா.பேட்டையில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி பழனிவேல் உடலில் காயங்களுடன் தா.பேட்டை ,துறையூர் ரோட்டில் அமைந்துள்ள தேவரப்பம்பட்டி வனப்பகுதி சாலையோரத்தில் இறந்து கிடப்பதாக மோகனாம்பாலுக்கு தகவல் தெரிய வந்தது.

கணவரின் சடலத்தை பார்த்து கதறி அழுத மோகனாம்பாள் ஜெம்புநாதபுரம் காவல்நிலையத்தில் தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்தார். தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்து போன பழனிவேலுவின் நண்பரும் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் போக்குவரத்து கிளை பணிமனையின் காசாளருமான ஆலத்துடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா (வயது 42) என்பவருக்கும் ஓவிய ஆசிரியை மோகனாம்பாலளுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ராஜா மற்றும் மோகனாம்பாளை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை செய்தனர். ஓவிய ஆசிரியை மோகனாம்பாலுக்கும் ராஜாவிற்கும் கடந்த நான்கு வருடமாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதில் பழனிவேலு வீட்டில் இல்லாத சமயம் ராஜா மோகனாம்பாலுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கணவர் பழனிவேல் அவ்வப்போது தகராறு செய்வதும், தாக்குவதையும் சகித்து முடியாத மோகனாம்பாள் ராஜாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து பழனிவேலுவை கூலிப்படை வைத்து அடித்து உதைக்க, நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியை சேர்ந்த நண்பர் சுதாகர் என்பவரின் உதவியை நாடியுள்ளார்.

சுதாகர் திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பரத் (வயது 38)என்ற கூலிப்படை தலைவனை ராஜாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் பழனிவேலுவை கொலை செய்துவிட்டால் மோகனாம்பாலுடன் சேர்ந்து இருக்கலாம் என கருதிய ராஜா பழனிவேலுவை கொலை செய்து விடுமாறு பரத்திடம் கூறியுள்ளார்.

இதற்காக ராஜா கூலிப்படை தலைவன் பரத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். கடந்த 19ஆம் தேதி ராஜா கூலிப்படை தலைவன் பரத்திற்கு பழனிவேலுவை துறையூரில் வைத்து அடையாளம் காட்டியுள்ளார். இதையடுத்து துறையூரிலிருந்து தா.பேட்டைக்கு வீட்டிற்கு பைக்கில் வந்த பழனிவேலுவை காரில் பின்தொடர்ந்த கூலிப்படை தலைவன் பரத் தன் சகாக்களுடன் சேர்ந்து தேவரப்பம்பட்டி வனப்பகுதி அருகே பழனிவேலுவை வழிமறித்து நைலான் கயிறு மூலம் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.

உயிருக்கு போராடிய பழனிவேலுவை கூலிப்படையினர் தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பைக்கை சேதப்படுத்தி விபத்தில் பழனிவேலு இறந்தது போல உருவகம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

கணவரின் உடலில் விபத்தில் ஏற்பட்டது போன்ற காயம் இல்லாமல் இருப்பதை கண்டு போலீசார் சந்தேகப்படுவதை அறிந்த மோகனாம்பாள் தான் தப்பித்துக் கொள்வதற்காக கணவர் சாவில் மர்மம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் வெளிவந்ததை அடுத்து போலீசார் மோகனாம்பாள் கள்ளக்காதலன் ராஜா கூலிப்படையை அறிமுகம் செய்து வைத்த வளையப்பட்டி சுதாகர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் கொலை சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படையினரை தேடி வந்த நிலையில் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளரை பகுதியில் பதுங்கியிருந்த சேர்ந்த பரத் (வயது 32), விக்னேஸ்வரன் (வயது 21), பிரதீப் (வயது 21), கார்த்திக் (வயது 26) ஆகிய கூலிப்படையினரையும் கைது செய்தனர்.

அவர்களை திருச்சி மாவட்டம், துறையூர் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி மோகனாம்பாளை திருச்சி பெண்கள் சிறைச்சாலையிலும் மற்றவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

நல்லதொரு குடும்பத்திற்கு அச்சரமாக விளங்க வேண்டிய பெற்றோர்களால் இரண்டு குழந்தைகள் நெற்கதியாய் நடுத்தெருவில் நிற்பதாக உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Views: - 146

0

0