10ஆம் வகுப்பு துணைத் தேர்வில் ஆள்மாறாட்டம் : பொறியியல் கல்லூரி மாணவர் கைது!!

24 September 2020, 10:29 am
Student Arrest - updatenews360
Quick Share

விழுப்புரம் : 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய புதுச்சேரியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் 10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு கடந்த 21ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த தேர்வு 22 மையங்களில் நடந்து வருகிறது. நேற்று 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு கணித பாடத்தேர்வு நடந்தது.

விழுப்புரத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த தனித்தேர்வர்களில் ஒருவருக்கு தமிழ்வழிக்கல்வி என்று குறிப்பிடப்பட்டிருந்த விடைத்தாள் வழங்கப்பட்டிருந்தது. அதற்கு அந்த நபர், தேர்வு மைய கண்காணிப்பாளரான மணிபாலனிடம் சென்று தனக்கு ஆங்கில வழிக்கல்வி என்று குறிப்பிடப்பட்ட விடைத்தாளை தரும்படி கேட்டுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மணிபாலன், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் செல்வராஜ் ஆகியோர், அந்த தனித்தேர்வரின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை (ஹால் டிக்கெட்) வாங்கி பார்த்தபோது அதில் தமிழ்வழிக்கல்வி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உடனே தமிழ்வழிக்கல்வியில் பதிவு செய்து விட்டு ஏன் ஆங்கில வழிக்கல்வி என்று குறிப்பிடப்பட்டிருக்கும் விடைத்தாளை கேட்கிறீர்கள் என்று தேர்வு மைய கண்காணிப்பாளர் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் சரிவர பதில் தெரிவிக்கவில்லை.

மேலும் அவர் வைத்திருந்த தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் பிறந்த தேதி 30.6.1986 என்று இருந்தது. இந்த பிறந்த தேதியின் அடிப்படையில் தனித்தேர்வருக்கு 34 வயது இருக்க வேண்டும். ஆனால் அந்த தனித்தேர்வர் சுமார் 20 வயது மதிக்கத்தக்க நபராக இருந்தார். உடனே அந்த நபரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.

தொடர்ந்து, இதுபற்றி விழுப்புரம் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் நீலமேகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி ஆகியோருக்கு தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் அதிகாரிகள், அந்த தேர்வு மையத்திற்கு விரைந்து வந்து அந்த தனித்தேர்வரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், புதுச்சேரி மாநிலம் முத்தையால்பேட்டை பகுதியை சேர்ந்த கிஷோர் (வயது 19) என்பதும், இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவருடைய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை கைப்பற்றிய அதிகாரிகள், அவர் தேர்வு எழுத ஆன்லைனில் பதிவு செய்த விவரத்தை சரிபார்த்தனர்.

அப்போது கிஷோர் தனது பெயரில் தேர்வு எழுத ஒருமுறை பதிவு செய்ததும், அதேபோல் தனது உறவினரான புதுச்சேரி முத்தையால்பேட்டையை சேர்ந்த கார்த்திக் (வயது 34) என்பவருடைய பெயரில் மற்றொரு முறை பதிவு செய்ததும், இதில் கார்த்திக் தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடத்தேர்வுகளை எழுதுவதற்காக விண்ணப்பித்ததும், கார்த்திக்கின் புகைப்படத்திற்கு பதிலாக கிஷோர் தனது புகைப்படத்தை மாற்றி ஆன்லைனில் பதிவேற்றம் செய்து தேர்வு எழுத பதிவு செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் கார்த்திக் தேர்வு எழுத வேண்டிய இடத்தில் அவருக்கு பதிலாக கிஷோர் ஆள்மாறாட்டம் செய்து கடந்த 21ந் தேதி நடந்த தமிழ் பாடத்தேர்வையும், நேற்று நடந்த ஆங்கில பாடத்தேர்வையும் எழுதியிருந்த நிலையில் 3ஆவது நாளாக நடந்த கணித பாடத்தேர்வையும் ஆள்மாறாட்டம் செய்து எழுத முயன்றுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து கிஷோரை கல்வித்துறை அதிகாரிகள் பிடித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, கிஷோர் மீது தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் செல்வராஜ் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிஷோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 8

0

0