10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு..! தேர்வுத்துறை புதிய கட்டுப்பாடு அறிவிப்பு…

Author: kavin kumar
7 January 2022, 11:27 pm
12th Exam - Updatenews360
Quick Share

சென்னை: 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அதேப்பள்ளியில் மதிப்பீடு செய்யக்கூடாது என அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையில் நடப்பு கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்கியது. இதனால் மாணவர்களுக்கான பொதுத் தேர்விற்கான பாடங்கள் குறைக்கப்பட்டன. மேலும் மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு எழுதாமல் இருந்ததால், அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில், திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுத்துறையும் வெளியிட்டது.
டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரையில் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் காரணமாக 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை நடத்துவதற்கு 10ம் தேதி வரை தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்தநிலையில் தமிழ்நாடு அரசு 1 முதல் 9 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 6 ந் தேதி முதல் நேரடி வகுப்புகளும் தடை விதித்துள்ளது. ஆனால் பொதுத் தேர்வு எழுதும் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்தவும் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு நடைபெறும் திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முறை குறித்து தேர்வுத்துறை அறிவுரைகளை வழங்கியுள்ளது. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வரும் 19-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதன்படி, திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அதே பள்ளியில் மதிப்பீடு செய்யக் கூடாது எனவும், ஒரே பள்ளியில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல், வெவ்வேறு பள்ளிகளுக்கிடையே விடைத்தாள்களை பரிமாற்றம் செய்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு முடிந்த உடன் விடைத்தாள்களை கட்டி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மையத்தில் அதை ஒப்படைக்க வேண்டும் என பள்ளிகளுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Views: - 462

1

0