தவறான முறையில் தடுப்பூசி… இரண்டரை மாத குழந்தை உயிரிழந்த சோகம் : அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் அலட்சியம்!!

By: Udayachandran
15 September 2021, 5:53 pm
Vaccine Infant Dead-Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நாகர்கோவில் வடசேரியில் அரசு நகர்புற ஆரம்ப சுகாதர நிலைய செவலியர்கள் தவறான முறையில் தடுப்பூசி செலுத்தியதால் இரண்டரைமாத ஆண் குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி காட்டுநாயகன் தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 32). இவருடைய மனைவி ஆறுமுககணி (வயது 21). இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஒரு குழந்தை உண்டு.

இந்த நிலையில் ஆறுமுககணிக்கு கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பெற்றோர் நல்லபடியாக கவனித்து வந்தனர். இந்த நிலையில் குழந்தைக்கு கடந்த 8-ந் தேதி ஓட்டுபுரை தெருவில் அரசு பள்ளியில் குழந்தைகளுக்காக நடைபெற்ற தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

அதற்கு பின்னர் குழந்தையின் உடலில் சோர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தை கடந்த 11-ந் தேதி கால் வீக்கம் எடுத்து திடீரென இறந்துவிட்டது. குழந்தையின் மூக்கு வழியாக ரத்தம் வழிந்து இறந்ததாக கூறபடுகிறது. இது குறித்து சம்பந்தபட்ட அரசு செவலியர்களிடம் கேட்டதற்கு சரியான பதில் எதுவும் கூறவில்லை என குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுபற்றி குழந்தையின் பெற்றோர் கூறுகையில், ‘‘நாங்கள் ஓட்டுபுரை தெருவில் உள்ள சத்துணவு கூடத்தில் வைத்து எங்கள் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தினோம். ஐந்து டோஸ் மருந்தை மூன்று டோஸில் போட்டனர். கையில் ஒரு ஊசியும், இரண்டு தொடையில் இரண்டு ஊசியும் போட்டனர். அதன்பிறகு குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுவிட்டது. தவறான தடுப்பூசி செலுத்தியதால் குழந்தை இறந்ததாக சந்தேகிக்கிறோம். எங்கள் குழந்தைக்கு நடந்தது போல வேறு எந்த குழந்தைக்கும் நடக்ககூடாது. எனவே இதுதொடர்பாக வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்’’ என்றனர்.

அரசு நகர்புற ஆரம்ப சுகாதர நிலைய செவலியர்கள் தவறான முறையில் தடுப்பூசி செலுத்தியதால் இரண்டரைமாத ஆண் குழந்தை மரணமடைந்தது என்று பெற்றோர் குற்றம்சாட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 155

0

0