ஆசியாவில் முதன்முறையாக காபி பயிரிட்ட இந்திய நிறுவனம் : நேரடி விற்பனையில் இறங்குகிறது..!
27 November 2020, 6:05 pmகோவை : ஆசியாவில் முதன் முதலில் காபி பயிரிட்ட ‘மதர் மிர்ரா’ என்ற இந்திய நிறுவனம் தற்போது நுகர்வோருக்கு நேரடியாக தனது சுவையை அள்ளிக்கொடுக்க உள்ளது.
டீ, காபி என்றால் புத்துணர்ச்சியும், அதன் சுவையும், மனமுமே நம் நினைவுக்கு வரும். இந்த பயிரை பிரிட்டிசார் இந்தியாவில் பயிரிட்டிருந்த சூழலில், ஆசியாவிலேயே முதன் முறையாக மதர் மிர்ரா என்ற இந்திய நிறுவனம் காபி பயிரை பயிரிடத் தொடங்கியது.
பி.பி.ஆர்.சுப்பிரமணியம் என்பவரால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் தலைமுறை தலைமுறையாக இந்த விவசாயத்தை மேற்கொண்டு வருகிறது. மதர் மிர்ரா தோட்டத்தில் விளைந்த காபி பயிர்கள் பல்வேறு பெரு நிறுவனங்களும், நட்சத்திர விடுதிகளிலும் கிடைக்கப்பெற்று வந்தன. அதோடு, பல முன்னணி நிறுவனங்கள் இந்த காபியை வாங்கி அவர்களது பெயரில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த சூழலில், இந்த நிறுவனம் தற்போது நேரடியாக விற்பனையைத் துவங்கியுள்ளது.
‘மிர்ராஸ்’ என்ற பெயரில் காபி மற்றும் டீத்தூள் விற்பனையைத் துவங்கி இருக்கும் இந்த நிறுவனம், மிக விரைவில் நாடு முழுவதும் தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்த உள்ளதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கூர்க் பகுதியில் அமைந்துள்ள எங்களது தோட்டத்தில் விளைவிக்கப்படும் காபி பயிர்களை நாங்களே நேரடியாக விற்பனை செய்யத் துவங்கியுள்ளோம். இந்த ஊரடங்கிற்கு முன்பு மாதம் 50 டன் வரை காபி பயிர்கள் அறுவடையானது. ஊரடங்கால் உலக நாடுகளில் தேவை குறைந்ததால் தற்போது 30 டன் வரை அறுவடையாகிறது. விரைவில் இந்த நிலை மாறும். ஏற்கனவே இணையம் வழியாக எங்களது காபி மற்றும் டீத்தூள், சமையல் எண்ணை வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காலத்தில் எங்களது வியாபாரம் இணையம் மூலமாக பன்மடங்காகப் பெருகியுள்ளது.
விரைவில் கோவையில் உள்ள 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ‘மிர்ராஸ்’ காபி கிடைக்கும். முதற்கட்டமாக தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களிலும் சில்லறை விற்பனையை முறையாக துவங்க உள்ளோம். அடுத்த கட்டமாக இந்தியா மற்றும் பன்னாடுகளுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்த உள்ளோம். ஒற்றை தோட்டப் பயிர் என்பதால் இதன் சுவை தனித்துவம் பெற்று இருக்கும். விலையும் கூடுதலாக இருக்காது, இவ்வாறு சுந்தர் சுப்ரமணியம் தெரிவித்தார்.
0
0
1 thought on “ஆசியாவில் முதன்முறையாக காபி பயிரிட்ட இந்திய நிறுவனம் : நேரடி விற்பனையில் இறங்குகிறது..!”
Comments are closed.