விசைப்படகு மீனவர்களால் தொழில் பாதிப்பு : கடலுக்கு செல்லமாட்டோம் என நாட்டுபடகு மீனவர்கள் அறிவிப்பு!!

28 January 2021, 6:05 pm
fisherman- Updatenews360
Quick Share

தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே விசைப்படகு மீனவர்களால், நாட்டுபடகு வலைகள் சேதமடைந்து தொழில் பாதிக்கப்பட்டு வருவதால், இப்பிரச்சினைக்கு அரசு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காணும் வரை நாட்டுபடகு மீனவர்கள் மீன்பிடிக்க சொல்லப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கீழ வைப்பார், சிப்பிகுளம் மற்றும் வேம்பார் பகுதியில் மிகவும் முக்கியமான தொழில் மீன்பிடி தொழில் தான். சுமார் 1000க்கும் மேற்பட்ட நாட்டுபடகில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

மீன்பிடித்தொழிலை நம்பி சுமார் 3500 மீனவ குடும்பங்கள் உள்ளன. இதற்கிடையில் வேம்பார் பகுதியில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்களுக்கும், நாட்டுபடகு மீனவர்களுக்கும் 15 ஆண்டுகளுக்கு மேலாக மீன்பிடிப்பதில் பிரச்சினை இருந்து வருகிறது.

விசைப்படகினால் தங்களது மீன் வலைகள் சேதப்படுத்தப்படுவதாக கூறி நாட்டுபடகு மீனவர்கள் பல வருடங்களாக குற்றம்சாட்டி வருகின்றனர். அவ்வப்போது இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்படுவதும் அதிகாரிகள் சமதான பேச்சுவார்த்தை நடத்துவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக விசைப்படகினால், நாட்டுபடகு மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு நாளும் 2லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகள் சேதமடைந்து வருவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காணும் வரை மீன்பிடிக்க செல்லப்போவதில்லை என்று கீழவைப்பார்,சிப்பிகுளம் பகுதி நாட்டுபடகு மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

விசைப்படகுகள் அனைத்தையும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும், பலமுறை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும், நிரந்தர தீர்வு காணும் வரை இனி மீன்பிடி தொழில் செய்யபோவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

சில மாவட்டங்களில் வாரத்தில் 3 நாள்கள் விசைபடகு மீனவர்கள், 3நாள்கள் நாட்டுபடகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி கொடுக்கப்பட்டு வருவது போன்று இப்பகுதியில் கொடுத்தால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று மற்றொரு தரப்பு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, இது பல ஆண்டுகளாக பிரச்சினை, இதனை தீர்க்க இருதரப்பினரிடமும் பேசி வருகிறோம், தற்பொழுது கூட பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளோம், விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளனார்.

Views: - 0

0

0