காயமடைந்த யானைக்கு ‘ஜம்போ’ நண்பர்கள் உதவியுடன் சிகிச்சை; நெட்டிசன்கள் வியப்பு

Author: Poorni
4 January 2021, 8:48 am
Quick Share

முதுகில் காயமடைந்த காட்டு யானை ஒன்றுக்கு மற்ற யானைகள் உதவியுடன், சிகிச்சை அளிக்கப்பட்ட வீடியோ நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. நீலகிரியில் நடந்த இச்சம்பவத்தை, ஐ.எப்.எஸ்., அதிகாரி சுஷாந்தா நந்தா தனது டுவிட்டரில் பகிர அது வைரலானது.

தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளன. அங்கு, முதுகில் காயமடைந்த காட்டு யானை ஒன்று, வலியால் அவதியுற்றது. காயமடைந்த அந்த யானைக்கு, வலுவான ஜம்போ யானைகள் உதவியுடன், வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த வீடியோவை, ஐ.எப்.எஸ்., அதிகாரி சுஷாந்தா நந்தா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், காயமடைந்த காட்டு யானையின் காலில் கயிறு கட்டப்பட்டிருந்தது. அந்த யானைக்கு அருகில் இருந்த மற்றொரு யானை மீது கால்நடை மருத்துவர்கள் அமர்ந்திருந்தனர். அதனை சுற்றியிருந்த மற்ற ஜம்போ யானைகள், காயமடைந்த யானையை ஆசுவாசப்படுத்திக்கொண்டே சுற்றி நின்றிருந்தன. தொடர்ந்து, யானையின் முதுகில் அமர்ந்திருந்த டாக்டர்கள், யானைக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

அங்கு என்ன நடக்கிறது என்பதை காண மக்களும் கூட்டமாக கூடிவிட்டனர். இது அரிதான சம்பவம் என்பதால், அனைவரும் தங்கள் மொபைல் போனில் இதனை வீடியோவாக எடுக்க துவங்கினர். தான் டுவிட்டரில் பகிர்ந்த வீடியோவில், ‘‘தேவதைகள் பணியில் இருக்கிறார்கள்’’ என சுஷாந்தா பதிவிட்டார். பலரும் அந்த வீடியோவை பார்த்து ரசித்தனர்.

மைக்ரோ பிளாக்கிங் தளத்திலும் இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டது. அதில் ஒரு பயனர், ‘‘அற்புதம்! இதுபோல் மிருகத்தை அமைதிப்படுத்துவதை இதுவரை நான் பார்த்ததில்லை’’ என வெளிப்படையாக பதிவிட்டார். உங்களுக்கும் இந்த வீடியோ பிடித்திருக்கிறது தானே!

Views: - 42

0

0