மழையால் வீணாகும் காய்கறிகள்: கப்பல் விட்டு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள்…வைரலாகும் வீடியோ!!

Author: Aarthi Sivakumar
29 October 2021, 4:31 pm
Quick Share

கோவை: எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் காய்கறிகள் அழுகி வீணாவதாக கூறி மாநகராட்சியை கண்டித்து காய்கறி வியாபாரிகள் மழைநீரில் காகித கப்பல் விட்டு தங்கள் வேதனையை தெரிவித்து வருகின்றனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எம்.ஜி.ஆர் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் டன் கணக்கில் காய்கறிகள் வருகின்றன.

இந்த மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கும் உள்ளூர், வியாபாரிகளுக்கும் காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மாநகராட்சிக்கு இதனால் வருடம் தோறும் பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்தும் இந்த மார்க்கெட்டில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று வியாபாரிகள் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

மாநகராட்சியின் இந்த போக்கை கண்டிக்கும் விதமாக எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் நூதனமாக தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதன்படி, நேற்று பெய்த மழையில் வியாபாரிகள் காகித கப்பலை ஓடவிட்டு மாநகராட்சியின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வந்து செல்லும் இந்த மார்க்கெட் போதியை அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்ட வியாபாரிகள் மழை நீரில் காகித கப்பல் விட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 259

0

0