இறப்பிலும் இணைபிரியாத தம்பதிகள்…! காதலர் தினத்தன்று நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்….

Author: kavin kumar
14 February 2022, 4:11 pm
Quick Share

திருவாரூர் : திருவாரூரில் கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் அருகே உள்ள பள்ளி வாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 76 வயதான பக்கிரிசாமி என்பவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று காலை அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது மனைவி கணவரின் இறப்பை தாங்கமுடியாமல் அவர் அருகிலேயே அமர்ந்து அழுதபடி இருந்திருக்கிறார். உயிரிழந்த பக்கிரி சாமியின் மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததால் அவர் வந்த உடன் இறுதிச் சடங்கு செய்வதற்காக உறவினர்கள் காத்திருந்தனர்.

இந்தநிலையில் கணவர் உயிரிழந்த துக்கம் தாங்காமல் எந்த நேரமும் கணவர் உடல் அருகிலேயே அமர்ந்து  அழுது கொண்டிருந்த 68 வயதுடைய சந்திரா நேற்று இரவு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர்களின் மகன் வெளிநாட்டில் இருந்து வருவதற்குள் தாய் தந்தை இருவரும் இறந்தது என்பது அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

இறப்பிலும் இணைபிரியாமல் உயிர் நீத்த இந்த தம்பதிகளை பற்றி அவரது உறவினர்கள் கூறுகையில், “மிகவும் அன்னியோன்யமாக பக்கிரிசாமி சந்திரா தம்பதிகள் வாழ்ந்து வந்ததாகவும், பக்கிரிசாமிக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனதில் இருந்து அவரது மனைவி சந்திரா மிகவும் கவலையுடன் சோகத்துடனும் காணப்பட்டதாகவும், அடிக்கடி அவருடன் சேர்ந்து நானும் இறந்துவிட்டால் அது எனது பாக்கியம் ஆக இருக்கும் என்று கூறி வந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று அவர்களது இறுதிச் சடங்கு நடைபெற்றது. அதில் தம்பதியர்கள் இருவரின் உடலையும் சேர்த்து வைத்து ஒரே பாடையில் இருவரையும் அருகருகே கிடத்தி, ஒரே அமரர் ஊர்தியில் எடுத்துச் சென்று கிராமமக்கள் நல்லடக்கம் செய்தனர். 52 ஆண்டுகள் இல்லற வாழ்க்கையில் இணைபிரியாமல் வாழ்ந்த இந்த தம்பதியினர் இறப்பிலும் இணைபிரியாமல் இருந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காதலர் தினத்தன்று இந்த இறப்பிலும் இணைபிரியாத தம்பதியினரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது என்பது உண்மையாக நேசிக்கும் தம்பதிகளிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

Views: - 507

0

0