கோவையில் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர், ஏட்டு : ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2021, 12:59 pm
Police Bribe - Updatenews360
Quick Share

கோவை : கோவை அருகே விபத்தில் சிக்கிய கார் உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி செல்வநாகரத்தினம் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் சில நாட்களுக்கு முன்பு கார்-பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பைக்கில் வந்த நபர் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு கிணத்துக்கடவு போலீசார் அங்கு விரைந்தனர்.

விபத்தில் சிக்கிய வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். காரை மீட்க உரிமையாளர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். காரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு செல்ல இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் ஏட்டு வெங்கடாசலம் ஆகியோர் லஞ்சம் கேட்டுள்ளனர்.

முதலில் கார் உரிமையாளர் ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளார். மீண்டும் போதாது என ரூ. 2,500 வாங்கியுள்ளனர். அதன் பிறகும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் நேற்று இருவரிடமும் பேரூர் டிஎஸ்பி விசாரணை நடத்தினார்.

அதில் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் ஏட்டு வெங்கடாசலம் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர், ஏட்டு மாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 269

0

2