கேரளாவில் அதிகரிக்கும் ஜிகா வைரஸ் பரவல்: தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு..!!

11 July 2021, 6:59 pm
Quick Share

கோவை: கேரளாவில் கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டியுள்ள 13 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து மாநிலத்தில் பேருந்து போக்குவரத்து, மாநிலத்துக்குள்ளான இ-பதிவு முறையை ரத்து உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாநிலங்கள் இடையேயான பொதுப் போக்குவரத்துக்கு தடை தொடர்ந்து வருகிறது.

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வருபவர்கள் கட்டாயம் இபதிவு செய்திருக்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் புதிதாக 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்காமல் இருக்க கேரள எல்லையை ஒட்டியுள்ள சோதனைச் சாவடிகள் உஷார்படுத்தப்பட்டன.

கோவை மாவட்டத்தில் மீனாட்சிபுரம், வேலன்தாவளம், நடுப்புணி, வாளையார் உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் இ பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்த பிறகு தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினர் தமிழக எல்லைக்குள் வருபவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்து, முக கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்து வருகின்றனர். முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து முகக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக – கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கோவை மாவட்டத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 400 க்கும் கீழ் குறைந்துள்ளது எனவும், வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிகளை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கேரளாவில் இருந்து கோவை வருபவர்கள் தமிழக அரசின் இணையதளத்தில் கட்டாயம் இ பதிவு செய்திருக்க வேண்டும் என தெரிவித்த மாவட்ட ஆட்சியர் சமீரன், கேரளாவில் கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டியுள்ள 13 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Views: - 141

0

0