நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தொலைந்து போன சாவிகள்…உடைக்கப்பட்ட பூட்டுக்கள்…!!

Author: Rajesh
22 February 2022, 9:35 am

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது சில இடங்களில் சாவிகள் தொலைந்ததால் பூட்டுகள் உடைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் மொத்தம் 12,820 வார்டுகள் உள்ளன. ஏற்கெனவே 218 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள வார்டு உறுப்பினர் பதவிகளை பிடிக்க 57,746 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. யாருக்கு வாக்கு என்பதை வேட்பாளர்கள் அல்லது முகவர்களிடம் காண்பித்த பிறகே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தபால் வாக்குகள் முடிந்த பிறகு ஸ்டார்ங் ரூமில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்குள் எடுத்து வரப்படும்.

சென்னை மாநகராட்சியில் 175-வது வார்டு தபால் வாக்கு பெட்டி சாவி இல்லாததால் வேட்பாளர்கள் முன்னிலையில் பூட்டு உடைத்து திறக்கப்பட்டது. சாவியை தொலைத்தவர்கள் யார் என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் பகுதிக்குட்பட்ட வ.புதுப்பட்டி ஊரில் உள்ள பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவி காணாமல் போகியுள்ளது.

இதனால், சாவியை அதிகாரிகள் தேடிப்பார்த்தனர். ஆனாலும், சாவி கிடைக்காததால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது. இதையடுத்து, அந்த அறையின் பூட்டை வாக்கு எண்ணிக்கை அதிகாரிகள் முன்னிலையில் உடைத்து, வாக்குப்பெட்டிகளை எடுத்தனர். பின்னர், வாக்கு எண்ணிக்கை பணியை தொடங்கியுள்ளனர்.  

இதே போல கடலூர் நகராட்சியில் ஸ்ட்ராங் ரூம் சாவி மாயமானதால் வாக்கு எண்ணும் பணிகள் தாமதமானது. இதனையடுத்து ஸ்ட்ராங் ரூமின் பூட்டு அறுக்கப்பட்டு மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டன. சாவியை தொலைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை பாயப்போகிறது என்று தெரியவில்லை.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!