சொன்னதை செய்த திருநங்கை : தேர்தலில் எதிர்க்கட்சிகளை மிரள வைத்து வெற்றிக் கொடி நாட்டிய கங்கா!!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2022, 11:50 am
Transgender Ganga Won -Updatenews360
Quick Share

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வேலூர் மாநகராட்சியின் 37-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட 49 வயதான திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2002 முதல் 20 ஆண்டுகளாக தி.மு.க-வில் உறுப்பினராக இருக்கும் கங்கா, கருணாநிதி ஆட்சிக்காலத்தில் திருநங்கையர் நல வாரிய உறுப்பினராக பதவிவகித்தார். மேலும், தற்போது தென்னிந்தியத் திருநங்கைகள் கூட்டமைப்புச் செயலாளராக இருந்து, 50 பேர்கொண்ட கலைக்குழுவையும் நடத்திவருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காலத்தில், வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்குத் தனது சொந்தச் செலவில் மளிகைப் பொருள்கள், வேட்டி, சேலைகள் என அனைத்து உதவிகளையும் செய்து வந்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “நான் தேர்தலில் வென்றால் எனது வட்டத்திலுள்ள அனைத்துத் தெருக்களுக்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவேன், மக்கள்நலப் பணித் திட்டங்களைக் கொண்டுவந்து திறம்படச் செயலாற்றுவேன்” என உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி தி.மு.க வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார். சொல்லி பெற்ற வெற்றியால் பொதுமக்கள் திருநங்கை கங்காவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 1161

0

0