ஓரங்கட்டப்படுகிறாரா கார்த்தி சிதம்பரம்..? காங்கிரஸ் கட்சியினர் ஒட்டிய கண்டன போஸ்டரால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2023, 4:01 pm
Karthi - Updatenews360
Quick Share

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்வானவர் கார்த்திக் சிதம்பரம். இவரது தந்தை பா.சிதம்பரம் முன்னாள் நிதி அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவியை வைத்து வந்தவர்.

கார்த்திக் சிதம்பரம் எம்பி தான் மனதில் பட்டதை தயக்கமின்றி தெரிவித்து வந்தார். இதனால் கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் அவருக்கு அதிருப்தி நிலவி வருகிறது.

மேலும் தனது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை கூட மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் தங்களது கோரிக்கை வலியுறுத்தி அவ்வப்போது, தங்கள் பகுதிக்கு வரும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்திடம் வழங்கி வருகின்றனர்.

மனுக்கள் மீது நடவடிக்கை குறித்து பதிலளிக்கும் கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் கட்சி சின்னம், ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் படம் கொண்டு அச்சிட்டிருந்த தனது லெட்டர் பேடில் பதில் அளித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது அவற்றைத் தவிர்த்து தனது பெயர் மட்டும் உள்ள லெட்டர் பேடில் பதில் அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. இது காங்கிரஸர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தனது கட்சி முன்னோடி தலைவர்களின் படங்களை லெட்டர் பேடிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மானாமதுரை நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அறிந்த கார்த்திக் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் ஒட்டப்பட்ட போஸ்டரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தில் கேஆர். இராமசாமி மற்றும் கார்த்திக் சிதம்பரம் என இரு கோஷ்டிகளாக செயல்படும் நிலையில், காங்கிரசாரின் கோஷ்டி மோதல் வீதிக்கு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த விவகாரம் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.

Views: - 178

0

0