மீண்டும் வேங்கைவயல் சம்பவமா? மேல்நிலை தொட்டியில் இறங்கி மலம் கழித்த மர்மநபர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan1 July 2025, 2:25 pm
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நல்லமனார்கோட்டை ஊராட்சி தொட்டனம்பட்டி கிழக்குத் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 50அடி உயரத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டப்பட்டு வருகிறது.
தொட்டி முழுவதுமாக கட்டப்பட்டு விட்ட நிலையில் இன்னும் குழாய் இணைப்புகள் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் மர்மநபர்கள் சிலர் மேலே ஏறி தொட்டிக்குள் இறங்கி உள்ளே மலம் கழித்து அசுத்தம் செய்துள்ளனர்.
இதையும் படியுங்க: பண்ணை வீட்டில் ரூ.200 கோடி மாயம்… அரசியல் பிரமுகர் பரபரப்பு விளக்கம்!!
மேலும் தொட்டிக்குள் மது அருந்திய பிளாஸ்டிக் கப், பீடி புகையிலை உள்ளிட்ட பொருட்களும் கிடந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள், இதுகுறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்பாக ப்ளீச்சிங் பவுடர் மட்டுமே தெளிக்கப்பட்டது. எனவே தண்ணீர் தொட்டியில் மலம் கழித்து அசுத்தம் செய்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மூவேந்தர் புலிப்படை சார்பில்
மனு. கொடுத்துள்ளனர்.
வேங்கை வயல் பிரச்சனை போல் விஷயம் பெரிதாவதற்குள் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.