ஜெயக்குமார் கைது விவகாரம் : திமுகவின் அராஜக போக்கை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2022, 1:12 pm

சென்னை : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.அன்று சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்றதன் காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து,ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மார்ச் 7 ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே,சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எம்.எல்.ஏ எஸ் .பி வேலுமணி ஆகியோர் சில தினங்களுக்கு முன்னர் சந்தித்தனர்.

இந்நிலையில்,ஆளும் திமுக-வின் கையாளாகாத் தனத்தையும்,ஆளும் திமுக அமைச்சர்களின் அராஜகத்தையும், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகளையும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மக்களுக்குத் தெளிவாகப் புரிகின்ற வகையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமாக செய்திகளைத் தந்து கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்திருப்பதைக் கண்டித்தும், பிணையில் வரமுடியாத அளவிற்கு தொடர் வழக்குகளை அவர் மீது புனைய முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,நாளை காலை 10.30 மணியளவில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

  • enforcement department charges against the actors who acting in online rummy app நான் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடிக்கவில்லை- அமலாக்கத்துறை வழக்கில் பிரகாஷ் ராஜ் புது விளக்கம்?