சசிகலா கல்வெட்டு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல் நிலையத்தில் புகார்!!

Author: Udhayakumar Raman
20 October 2021, 10:54 pm
Quick Share

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் என கல்வெட்டு திறப்பு குறித்து சசிகலா மீது காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் புகார் அளித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து விடுதலையான பிறகு அரசியல் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த சசிகலா, அதிமுக கொடி கட்டிய காரிலேயே தொடர்ந்து பயணித்து வந்தார். ஆனால், அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 16 அன்று, அதிமுகவின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு, சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து கடந்த அக்டோபர் 17 அன்று, அதிமுகவின் பொன் விழா ஆண்டுக் கொண்டாட்டங்களைக் கடைப்பிடிப்பதற்காக சென்னை தி நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவில்லத்திலும், ராமாபுரம் எம்.ஜி.ஆர் இல்லத்திலும் நிகழ்ச்சிகளில் சசிகலா கலந்துகொண்டார் .

அப்போது சென்னை தி நகரிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் கல்வெட்டு ஒன்று, சசிகலா தரப்பால் வைக்கப்பட்டது. அதில் சசிகலாவின் பெயர் அதிமுகவின் பொதுச் செயலாளர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிமுகவினருக்கு அதிருப்தியை உருவாக்கியது. மேலும், சசிகலா இந்தப் பயணத்திற்கு ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரில் அதிமுக கொடியைக் கட்டியவாறு பயன்படுத்தினர். இதுகுறித்து அப்போது பேசிய அமைச்சர் ஜெயகுமார், சசிகலா அதிமுகவிற்குள் நுழைவதை ஏற்க முடியாது எனவும், அவரது செயல்பாடுகளுக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம் எனவும், அவர் வேண்டுமானால் அமமுகவின் தலைமைப் பொறுப்புகளில் இருந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலாவின் பெயரை அதிமுகவின் பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டதை எதிர்த்து, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “சசிகலா அதிமுக பொது செயலாளர் என கல்வெட்டு திறப்பது சட்டத்திற்கு உட்பட்ட செயல் அல்ல. சட்டத்தை மதிக்காமல் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல. சசிகலா மீது மோசடிவழக்கு பதிய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க சசிகலா முயற்சித்து வருகிறார். சசிகலா அ.திமுகவின் கொடி மற்றும் பெயரை பயன்படுத்துவது சட்ட விரோதம்.குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சசிகலா அதிமுக பெயரை பயன்படுத்தி வருகிறார். அவருக்கு திமுக உதவி செய்கிறது.கடந்த 17 ம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அதிமுக பொது செயலாளர் சசிகலா என கல்வெட்டு திறக்கப்பட்டது. இது குறித்து அவர் மீது மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Views: - 169

0

0