அதிமுகவில் இணைந்து விட்டு ஜெ.,வை பற்றி புகழ்ந்து பேசுங்க : அண்ணாமலைக்கு செக் வைத்த ஆர்பி உதயகுமார்!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2024, 2:10 pm
RB
Quick Share

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கோட்டைமேடு கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் நடந்த அன்னதானத் தினை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் குடிநீர் பிரச்சனைக்கும், விவசாயத்திற்கும் தேவையானது முல்லைப்பெரியாறு ஆகும்.

இந்த முல்லை பெரியாறில் ஜெயலலிதா தொடர் சட்டப் போராட்டம் நடத்தி அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம். அணை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற தீர்ப்பை பெற்றுதந்தார். அது மட்டுமல்ல எட்டு முறை அணையை ஆய்வு செய்து அணை பலமாக இருக்கிறது என்று நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கேரளா அரசு புதிய அணைக்கட்ட முயற்சிக்கிறது. தி.மு.க. அரசு முல்லைப் பெரியாறு உரிமைக்காக எதையும் செய்யவில்லை. தி.மு.க. அரசு தொடர்ந்து மெத்தன போக்கை காட்டி வருகிறது.

ஜனவரி மாதம் புதிய அணைக்கட்ட மத்திய அரசுக்கு மனுவை கேரளா அரசு அனுப்பி வைத்தது. அதை பரிசீலனை செய்து 11 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர். முல்லைப்பெரியாறின் உரிமை காக்க வேண்டிய தமிழக அரசு உரிமையை காவு கொடுத்து விட்டது.

இது தொடர்பாக எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். தற்போது முல்லைப் பெரியாறில் உரிமையை நிலைநாட்ட கேரள அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்காமல் மென்மை போக்கை கடைபிடிக்கிறார் முதலமைச்சர்.

அங்கு இருக்கும் முதலமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறார். எதற்காக இதை செய்கிறார் முதலமைச்சர்? வாக்கு வங்கிக்காகவா? கூட்டணி தர்மத்திற்காகவா? தன் குடும்ப சொத்தை பாதுகாக்கவா?.

முல்லை பெரியாறு உரிமை பிரச்சனையில் தொடர்ந்து மென்மை போக்கை தி.மு.க. அரசு கடைபிடித்தால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரை அல்லது தேனியில் விவசாயிகள் உரிமையை காக்க மாபெரும் போராட்டம் நடத்த அஞ்ச மாட்டோம்.

ஜெயலலிதா இந்துத்துவா கொள்கையை கடைப்பிடித்தார். அவர் இல்லாததால் அதை நாங்கள் கடைபிடிக்கிறோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறுகிறார்.

அ.தி.மு.க. இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்ற அம்மாவின் வார்த்தைக்கு ஏற்ப எடப்பாடி பழனிசாமி தீவிர களப்பணியாற்றி வருகிறார்.

சிலருக்கு புகழ்வதும், இகழ்வதும் கைவந்த கலை. அண்ணாமலையின் பாராட்டு அ.தி.மு.க.விற்கு தேவை இல்லை.

மேலும் படிக்க: மின்சாரம் தாக்கிய சிறுவன், சிறுமி உயிரிழந்த விவகாரம்… புலன் விசாரணை முடிந்ததும் நடவடிக்கை ; கோவை காவல் ஆணையர் தகவல்

அண்ணாமலை அ.தி.மு.க. உறுப்பினராக சேர்ந்து கொண்டு அம்மாவை பற்றி பேசினால் ஏற்றுக் கொள்வோம். அண்ணாமலை அவரது தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, வீரசாவர்கர் ஆகியோரின் சாதனையை சொல்லி ஏன் பாராட்டவில்லை.

மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த ஜெயலலிதாவை அண்ணாமலை அரசியல் உள்நோக்கத்துடன் புகழ்ந்து பேசியதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.

Views: - 120

0

0