கள்ளக்குறிச்சி வன்முறை.. தீக்கிரையான சான்றிதழ்கள் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2022, 12:12 pm
School Certificate - Updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தவர் மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதற்கிடையே கடந்த 3 நாட்களாக டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கூறி பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வந்தது.
இதன் மூலமாக நேற்று முன்தினம், மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். ஒரு கட்டத்தில் இது பெரும் கலவரமாக வெடித்து, பள்ளிக்கு தீ வைத்தனர்.

மேலும் அங்கிருந்த பஸ்கள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். அப்போது மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களையும் தீ வைத்துக் கொளுத்தினர்.இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது : கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்ட நிலையில் தீக்கிரையான சான்றிதழ்களை திரும்ப வழங்க வருவாய்த் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க உள்ளோம். பள்ளியில் சான்றிதழ்கள் எரிந்துள்ளன .

அருகில் உள்ள தனியார் பள்ளிகள் சக்தி பள்ளிக்கு உதவ தயாராக இருப்பதாக கூறியுள்ளன. மாற்றுச் சான்றிதழ்கள் மட்டுமின்றி பிறப்பு சான்றிதழ் உட்பட மாணவர்களின் பல சான்றிதழ்கள் எரிந்துள்ளன. எனவே வருவாய் துறை மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்து கொடுப்போம். மாணவர்களுக்கு டூப்ளிகேட் டிசி எளிதில் வழங்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்

Views: - 435

0

0