‘நாங்கதான் ஆளுங்கட்சி.. நீங்க விலகுங்க’.. பொங்கல் பரிசு வழங்கிய பாமக கவுன்சிலரை தடுத்து நிறுத்தி திமுக வட்டச்செயலாளர் அடாவடி..

Author: Babu Lakshmanan
10 January 2023, 12:06 pm
Quick Share

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 10வது வார்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வில் ரேஷன் கடையை கைப்பற்றி தனக்கு வேண்டியவர்களுக்கு பொருட்களை திமுக கட்சியின் வட்ட செயலாளர் வழங்கியதால் மக்கள் கொந்தளித்து போகினர்.

தைப்பொங்கலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,93,204 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கும் பணி நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்காக குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு வருகை புரிவதை தவிர்ப்பதற்காக, ஒரு நாளைக்கு சுமார் 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி 10வது வார்டுக்குட்பட்ட கைலாசநாதர் கோவில் மேட்டு தெரு பகுதியிலுள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்க, அந்த பகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி சண்முகம் வந்திருந்தார். கவுன்சிலர் தேர்தலில் சரஸ்வதி சண்முகத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்ற திமுகவின் வட்ட செயலாளர் ஏஎஸ்.ரவி தனது ஆதவாளர்களுடன் அங்கு வந்தார்.

நாங்கள்தான் ஆளுங்கட்சி, இந்த தொகுப்பினை நாங்கள் தான் வழங்குவோம் என ஏஎஸ்.ரவி தகராறு செய்ய, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி சண்முகம் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க முற்பட்டபோது, திமுகவினர் பாமகவினரை தடுத்து நிறுத்தி நியாய விலை கடையை கைப்பற்றி தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பொருட்களை வழங்கினர்.

இதைக் கண்ட மக்கள் எங்களுக்கு நியாயவிலைக் கடை ஆட்கள்தான் தொகுப்பினை வழங்க வேண்டும் எனக் கூற, பொதுமக்களுடனும் திமுக வட்ட செயலாளர் ரவி சண்டைக்கு சென்றதால், அப்செட் ஆன பொதுமக்கள் சிலர் பொருட்களை கூட வாங்காமல் வீடுகளுக்கு திரும்ப சென்றனர்.

அதையும் தாண்டி நியாயவிலைக் கடையின் பணியாளர்களிடம் சிலர் கேள்வி கேட்டனர். பதில் அளிக்க முடியாமல் நியாய விலை கடை பணியாளர் அமைதி காத்தார்.

திமுக வட்டச் செயலாளர் ஏஎஸ்.ரவி நாங்கள் தான் ஆளுங்கட்சி, நாங்கள்தான் பொங்கல் பரிசினை வழங்குவோம், நாங்கள் தான் பொறுப்பில் இருக்கிறோம், நாங்கள்தான் தொகுப்பினை வழங்க வேண்டும் என நகர செயலாளரும், எம்எல்ஏவும், அமைச்சரும் கூறி உள்ளார்கள். அதனால் நாங்கள் தான் தொகுப்பினை வழங்குவோம், இஷ்டமுள்ளவர்கள் வாங்குங்கள் எனக் கூறியதை கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திமுகவின் வட்ட செயலாளர் அரசு நியாய விலை கடையை கைப்பற்றி, தானே அரிசி உள்ளிட்ட பொருட்களை எடை போட்டு கொடுத்தது அப்பகுதியில் மிகுந்த சலசலப்பை உண்டாக்கி உள்ளது. பாமக கவுன்சிலர் மற்றும் ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கும் இடையேயான போட்டா போட்டியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தடைபட்டது.

இந்த நிலையில், திமுக வட்டச் செயலாளர் ரவி பாமக மாமன்ற உறுப்பினர்கள் இடையேயான வாக்குவாதம் மற்றும் ரவி பொதுமக்களிடம் சண்டையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 345

0

0