ஆடு மேய்க்க சென்ற பெண் கற்பழித்து கொலை : காஞ்சிபுரம் அருகே அதிர்ச்சி!!
4 September 2020, 2:08 pmகாஞ்சிபுரம் : ஆற்றுப்படுகைக்கு ஆடு மேய்க்க சென்ற 49 வயதுடைய பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட தாங்கி பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன். இவருடைய மனைவி வேங்கை அம்மாள். இவர்களுக்கு சாந்தி (வயது 49), எல்லம்மாள், நாகம்மாள் என 3 மகள்கள் உள்ளனர்.
கன்னியப்பன் இறந்த நிலையில் விவசாயக் கூலி வேலை செய்து வந்த தாய் மற்றும் தங்கை களுடன் திருமணமாகாத மூத்த பெண் சாந்தி ஒரே குடும்பமாக வசித்து வந்தார். மற்ற இரு சகோதரிகளும் திருமணமாகி கணவனை இழந்து கூலி வேலை செய்துகொண்டு தாய் வீட்டில் வசித்து வருகின்றனர்.
சாந்தி நான்கு ஆடுகள் வைத்துள்ளார். அதை ஆடு மேய்த்து கொண்டு குடும்பத்தையும் கவனித்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு கருக்குபேட்டை வேகவதி ஆற்றுப்படுகை அருகே உள்ள புளியந்தோப்பு பகுதிக்கு ஆடுகளை மேய்க்க சென்றார். மாலை 3 மணி அளவில் தங்கை எல்லம்மாள் உணவு எடுத்துக் கொண்டு சாந்தி எப்போதும் ஆடு மேய்க்கும் பகுதிக்கு சென்று தேடினார்.
சாந்தியை காணாததால் வீட்டுக்கு திரும்பி வந்து உறவினரிடம் கூறியுள்ளார். இருட்டு துவங்கியதும் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மட்டும் எப்போதும் போல் வீட்டுக்கு வந்து விட்டன. சாந்தி மட்டும் வரவில்லை. எனவே உறவினர்கள் அனைவரும் இரவு முழுவதும் சாந்தியை தேடி வந்தனர். இரவு வெளிச்சம் இல்லாத காரணத்தினால் சாந்தியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இன்று காலை தேடி வரும்போது சுமார் 7 மணி அளவில் ஆடு மேய்ந்து கொண்டிருந்த இடத்துக்கு அருகே உள்ள முள் புதரின் உள்ளே சாந்தி சடலமாக காணப்பட்டார். அருகே சென்று பார்த்தபோது மர்ம நபர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வாலாஜாபாத் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
அந்தப் பகுதியில் வடமாநில இளைஞர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். அதேபோல் சாந்தி கொலையுண்ட பகுதியில் மதுபானம் அருந்திவிட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் சிலர் உள்ளனர். இவர்கள் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.ஆடு மேய்க்க சென்ற ஒரு முதிர் கன்னி பெண் மர்ம நபர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0