அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு சேதம் : திமுகவினரை கண்டித்து சாலை மறியல்

5 May 2021, 4:30 pm
kangeyam - updatenews360
Quick Share

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலத்தில் இருந்த கல்வெட்டை சேதப்படுத்திய திமுகவினரைக் கண்டித்து அதிமுகவினர் சாலைமறியலில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் 1வது வார்டு பகுதியான திருவிக நகரில் இருந்து ஏ.சி.நகர் செல்லும் வழியில் பி.ஏ.பி. வாய்க்கால் செல்கின்றது. இந்த வாய்க்காலை கடந்து செல்ல பாலம் வேண்டும் என கடந்த ஆட்சி காலத்தில் இருந்தே பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். 2016 சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் நன்றி தெரிவிக்க வந்த அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் தனியரசிடம் பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் பாலம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2016 -2017ல் ரூபாய் 15.50 லட்சம் மதிப்பில் இங்கு பாலம் கட்டப்பட்டது. இதனால், ஏ.சி. நகர் சென்று வருவதற்கு பொதுமக்களுக்கு பயனாக இருந்தது. இந்த பாலத்தில் கல்வெட்டு இருந்தது. அந்த கல்வெட்டில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் தனியரசு தலைமையிலும், அப்போதைய நகராட்சி தலைவர் வெங்கு (எ)மணிமாறன் முன்னிலையிலும் திறக்கப்பட்டது.

இதில் வாழ்த்துரை நகராட்சி துணை தலைவர் கந்தசாமி என அச்சிடப்பட்டிருந்தது. அந்த கல்வெட்டில் 2ம் தேதி இரவு சமூகவிரோதிகள் 1 வார்டு முன்னாள் கவுன்சிலரும் காங்கேயம் நகராட்சி துணைத்தலைவரின் பெயர் உள்ள இடத்தை மட்டும் இடித்து சேதப்படுத்தி விட்டனர். இது குறித்து பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்தது. நேற்று பொதுப்பணித்துறை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில், 1வது வார்டு பகுதி பொதுமக்கள் கந்தசாமி தலைமையில் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக, திருவிக நகரில் இருந்து திருப்பூர் ரோடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர்

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மெயின் ரோட்டுக்கு பொதுமக்களை விடாமல் தடுத்து நிறுத்தியதுடன், ஒரு வாரத்தில் பொதுசொத்தை இடித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பின்னரே பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

தேர்தலில் வெற்றி பெற்று திமுக இன்னும் பதவிக்கு வருவதற்கு முன்பே இது போல் பொதுச்சொத்துக்களை அளித்து அராஜகத்தில் ஈடுபடுவதை பார்த்தால், இன்னும் 5 ஆண்டுகள் எவ்வாறு சமாளிப்பது என்ற அச்சம் எழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Views: - 275

1

0