பாலாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு : ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஆபரேட்டர் : காப்பாற்ற முடியாமல் தவித்த பொதுமக்கள்..!!

Author: Babu Lakshmanan
19 November 2021, 4:55 pm
kanjipuram - updatenews360
Quick Share

காஞ்சிபுரம் அருகே பாலாற்று தரைப்பாலம் பகுதியில் தண்ணீர் திறக்க சென்றபொழுது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஆபரேட்டரை தீயணைப்புத்துறை தேடி வருகின்றனர்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஏறக்குறைய முப்பது பம்பு ஆபரேட்டர்கள் இருக்கின்றனர். இவர்கள் பாலாறு பகுதியில் இருந்து காஞ்சிபுரம் நகராட்சி மக்களுக்கும், அதனை ஒட்டிய கிராம பகுதிக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.

காஞ்சிபுரம் அடுத்த சின்னையன் குளம் பகுதியை சேர்ந்த ஆபரேட்டர் கருணாகரன் இன்று காலை பாலாறு மேம்பாலம் அருகே உள்ள தரைப்பாலம் பகுதியில் குடிநீர் வழங்குவதற்காக ஆப்ரேட் செய்ய சென்ற பொழுது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக இழுத்துச் செல்லப்பட்டார். அவ்வாறு பாலாற்றில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட போது, அங்கிருந்த ஒரு சிறிய மரத்தினை பிடித்து சத்தம்போட்டு தப்பிக்க முயன்றுள்ளார்.

ஆனால் பாலாற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் இவரால் தாக்குபிடிக்க முடியாமல், பாலாற்றில் இழுத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த பொதுமக்கள் பாலாற்று மேம்பாலம் பகுதியிலிருந்து கூச்சலிட்டு அவரை வேறு ஒரு மரக்கிளையை பிடித்துக் கொள்ளுமாறு சத்தம் போட்டுள்ளனர். இருப்பினும் அவர் வேகமாக இழுத்துச் செல்லப்பட்டார்.
உடனே அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததன் பேரில், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலையில் காவேரிப்பாக்கம் அணைக்கட்டிலிருந்து ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும். எனவே பாலாறு செய்யாறு பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வந்த நிலையில், ஆபரேட்டர் பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 267

0

0