‘நாடோடி’ பட பாணியில் காதலனுடன் சிறுமியை சேர்த்து வைத்த ஃபேஸ்புக் நண்பன் : தனிப்படை அமைத்து விசாரணை..!!

3 November 2020, 7:17 pm
Quick Share

கன்னியாகுமரி : நாகர்கோவிலில், காதலனுடன் சேர்த்து வைக்க சிறுமியை திருச்சிக்கு கடத்தி சென்ற பேஸ்புக் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 24ம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (24) என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, செல்வகுமாரை போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில், போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- குமரியில் மாயமான சிறுமிக்கும் கடலூரை சேர்ந்த விஜய் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறி இருவரும் காதலிக்க தொடங்கினர். அதேபோல், கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த செல்வகுமார் பேஸ்புக் மூலம் அவர்களுடன் இணைந்தார்.

இந்த நிலையில் சிறுமி அடிக்கடி பேஸ்புக், செல்போன் என இருந்ததால் வீட்டில் சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால் விஜயிடம் தன்னை அழைத்து செல்லும்படி தனது பேஸ்புக் தோழர் செல்வகுமாரிடம் சிறுமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக விஜய், செல்வகுமார் மற்றும் சிறுமி மூவரும் ஆலோசித்தனர். பின்னர், செல்வகுமார் சிறுமியை திருச்சிக்கு பைக்கில் அழைத்து சென்றுள்ளார். திருச்சி பைபாஸ் ரோட்டில் ஏற்கனவே விஜய் காத்திருந்தார். அவரிடம் சிறுமியை ஒப்படைத்துவிட்டு செல்வகுமார் திரும்பினார். போலீசார் தேடியதால் செல்வகுமார் தலைமறைவாக இருந்தார், என அவரிடம் நடந்த விசாரணையில் தெரியவந்தது.

சிறுமி மற்றும் அவரது காதலன் விஜய் ஆகிய இருவரும் சென்னையில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, தனிப்படை போலீசார் சிறுமியை மீட்பதற்காக சென்னை புறப்பட்டு சென்றுள்ளனர்.

Views: - 31

0

0

1 thought on “‘நாடோடி’ பட பாணியில் காதலனுடன் சிறுமியை சேர்த்து வைத்த ஃபேஸ்புக் நண்பன் : தனிப்படை அமைத்து விசாரணை..!!

Comments are closed.