பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணத்தை பறித்து செல்ல முயன்ற நபர் : ஊழியர் சாதுரியமாக செயல்பட்டதால் தப்பியது பல லட்ச ரூபாய்..!!

Author: Babu Lakshmanan
17 March 2022, 7:58 pm
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணத்தை திருடி தப்ப முயன்ற மர்ம நபர், பங்க் ஊழியரின் சாதுரியமான பதில் தாக்குதலால் பணத்தையும் பைக்கையும் போட்டுவிட்டு தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் அமைந்துள்ளது தினேஷ் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க். இந்த பெட்ரோல் பங்க்-ல் கழிந்த 13-ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை இருசக்கர வாகனத்தில் லுங்கி பனியன் அணிந்து வந்த மர்ம நபர், அங்கும் இங்குமாக சுற்றி திரிந்ததோடு, ஆள் இல்லாத நேரம் பார்த்து திடீரென பங்க் ஊழியர் நெல்சன் என்பவரை தாக்கி, பங்க்-ல் இருந்த ரூபாயை திருடி இருசக்கர வாகனத்தில் தப்பியோட முயன்றுள்ளார்.

அப்போது, சாதுரியமாக செயல்பட்ட பங்க் ஊழியர் முதியவரான நெல்சன் அவரை தாக்கி போகவிடாமல் வழிமறித்தார். இதை கண்ட மற்ற ஊழியர்களும் மர்ம நபரை சூழ்ந்து தாக்க முயன்றதால், அந்த மர்ம நபர் பண கட்டுகளை வீசி இருசக்கர வாகனத்தையும் அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து பங்க் ஊழியர் நெல்சன் குளச்சல் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கையில், அந்த மர்ம நபர் கொண்டு வந்த இருசக்கர வாகனம் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த தங்கதுரை என்பவரிடம் இருந்து திருடி கொண்டு, பெட்ரோல் பங்கிற்கு வந்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

தொடர்ந்து அவரை போலீசார் தேடிவரும் நிலையில், பங்க் ஊழியரை தாக்கி பணத்தை திருடி தப்ப செல்ல முயன்று, ஊழியர் தடுத்ததால், பணத்தையும் இருசக்கர வாகனத்தையும் போட்டு தப்பி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Views: - 621

0

0