ஆசிரியரின் வீட்டை உடைத்து 75 சவரன் நகை திருட்டு… ரூ.2 லட்சத்தையும் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள்..!!

Author: Babu
3 August 2021, 8:25 pm
gold theft - - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தக்கலை அருகே ஆசிரியர் வீட்டை உடைத்து 75 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தலகுறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் வில்சன்.இவரது மனைவி கிரேஸ்மேரி புதுக்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். வில்சன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மகன் கோவில்பட்டியில் வேலை பார்த்து வருகிறார்.

கிரேஷ்மேரி புதுக்கோட்டையில் தங்கி தனது ஆசிரியர் பணியை தொடர்ந்து வந்தார். முத்தலக்குறிச்சி ஊரில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை தனது உறவினரான நேசம் என்பவர் கண்காணிப்பில் விட்டு சென்றுள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை முத்தலக்குறிச்சியில் உள்ள தனது சொந்த வீட்டில் மகன் மற்றும் மருமகளுடன் தங்கிய கிரேஷ்மேரி அன்று மாலை மீண்டும் குடும்பதினருடன் திரும்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில், வீட்டை பாதுகாத்து வந்த நேசம் இன்று காலை வீட்டு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது, வீட்டின் முன் கதவு திறந்த நிலையில், காணப்பட்டதால் உடனடியாக போலீசாருக்கும் வீட்டு உரிமையாளர் கிரேஷ்மேரிக்கும் தகவலளித்தார்.

கிரேஷ்மேரி தக்கலை போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்துகையில், அந்த வீட்டில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதன் உள்ளே இருந்த 30 லட்சம் மதிப்பிலான 75 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் திருடி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து வழக்குபதிவு செய்த போலீசார் மோப்ப நாய் ஏஞ்சல் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Views: - 438

0

0