3 நிமிடத்தில் 230 திருக்குறள்.! கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த அரசுப் பள்ளி மாணவி
14 August 2020, 1:31 pmகன்னியாகுமரி : நாகர்கோவில் அருகே சொத்தவிளை கிராமத்தில் அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி 3 நிமிடம் 23 நொடிகளில் 230 திருக்குறள்களை ஒப்புவித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ளது சொத்தவிளை எனும் குக்கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் கண்ணன் மற்றும் சாந்தி தம்பதிகளுக்கு மூத்த மகளாக பிறந்து, அங்குள்ள அரசு பள்ளியில் 8 வகுப்பு படித்து வருகிறார் மாணவி யூதிஷா.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளியில் படித்தாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் தனி திறமை உண்டு என்பதை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட யூதிஷா தனது எண்ணத்தை தனது பள்ளி தலைமை ஆசிரியை அகிலாவிடம் தெரிவிக்க, ஏற்கனவே யுதிஷா 230 திருக்குறள்களையும் குறைந்த நேரத்தில் சொல்லும் தனி திறமை படைத்தவர் என்பதை தெரிந்து வைத்து இருந்த தலைமை ஆசிரியை அகிலா அந்த தனித்திறமையை வளர்க்க ஊக்கப்படுத்தினார்.
அதன் பயனாக 6 நிமிடங்களில் 230 திருக்குறளை ஒப்புவித்த யூதிஷா தனது கடின உழைப்பால் 4 நிமிடங்களில் 230 திருக்குறள்களை ஒப்புவிக்கும் அளவிற்கு முன்னேறினார். ஏற்கனவே விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 5 நிமிடங்கள் 46 நொடிகளில் 230 திருக்குறள்களை ஒப்புவித்து கின்னஸ் சாதனை புரிந்துள்ள நிலையில் அந்த சாதனையை முறியடித்து கின்னஸில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை யூதிஷாவின் ஏழ்மை தடுத்தது.
இந்நிலையில் அப்பகுதி அதிமுக பிரமுகர்கள் மூலமாக இந்த தகவல் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரத்திடம் தெரிவிக்கப்பட்டது .ஏழை மாணவியின் தனித்திறமையை உலகம் அறிய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன் படி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, கின்னஸ் சாதனை நிறுவனத்தினர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் முன்னிலையில் 230 திருக்குறள்களை 3 நிமிடங்கள் 23 நொடிகளில் ஒப்புவித்து தனது தனித்திறமையை வெளிப்படுத்தினார்.
தனது கடின உழைப்பின் பலனாக தனது தனி திறமையை வெளிப்படுத்திய யூதிஷாவிற்கு கின்னஸ் சாதனை நிறுவனம் சான்றிதழ்களையும் சாதனையாளர் பதக்கத்தையும் அளித்து கௌரவப்படுத்தியது.
இது குறித்து சாதனை மாணவி யூதிஷா கூறும் போது ஒவ்வொரு மானவர்களுக்குள்ளும் தனித்திறமை உண்டு அந்த திறமையை வெளிப்படுத்த தமிழக அரசு உதவ தயாராக உள்ளது. அரசு கொடுக்கும் உற்சாகத்தை ஒவ்வொரு மாணவர்களும் பயன்படுத்தி கொண்டால் அனைவரும் சாதனையாளராக ஆக முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்,
யூதிஷாவின் தாய் சாந்தி கூறும் போது, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு திறமை இருக்காது என்ற மூட நம்பிக்கையை தனது மகள் பொய்யாக்கி சாதனை படைத்துள்ளார். இது தனக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்து இருப்பதாக தெரிவித்தார். மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தினால் தனது மகளை போன்று பல சாதனையாளர்கள் வருவார்கள் என்றும் தெரிவித்தார்.