மனைவி, மகன் தூக்கிட்டு தற்கொலை… பணி முடிந்து வந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

25 August 2020, 10:48 pm
Quick Share

கரூர்: கரூர் அருகே தாய் மற்றும் மகன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே வெங்கமேடு பகுதியினை அடுத்த அருகம்பாளையம் நேதாஜிநகர் பகுதியில் வசித்தவர் பூங்கொடி. இவரது கணவர் ஞானசேகரன். இவர் இப்பகுதியில் உள்ள டைலர் கடையில் பணியாற்றி வரும் நிலையில், இன்று மாலை திடீரென்று வீட்டிற்குள் ஞானசேகரனின் மனைவி பூங்கொடியும், இவரது மகன் சரண் ஆகிய இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், வேலைக்கு சென்று வந்த ஞானசேகரன் இதை கண்டவுடன் அதிர்ச்சியடைந்து வெங்கமேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீஸாரின் விசாரணையில், பூங்கொடி சுவாசபிரச்சினையால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்ததாகவும், இவரது மகன் சரணுக்கும் தீராத வயிற்று வலி இருந்து வந்ததாகவும், இந்நிலையில் மருத்துவ செலவிற்கு வசதி இல்லை என்ற நிலையில், இந்த தீராத வலியால் தாய் மற்றும் மகன் ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

சரண் என்கின்ற இளைஞர் கரூரில் உள்ள தனியார் அறிவியல் கலைக்கல்லூரியில் எம்.எஸ்.இ இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தீராத வயிற்று வலியா ? அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்சினையா ? கடன் தொல்லையா ? என்ற பல்வேறு கோணங்களில் தாய் மகன் தற்கொலை சம்பவத்தினை வெங்கமேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட தாய், மகன் ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 27

0

0