திமுகவின் ஏவல் துறையான காவல்துறை:முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

Author: kavin kumar
22 October 2021, 11:23 pm
Quick Share

கரூர்: கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திமுக மாவட்ட செயலாளராக உள்ளதாகவும், தேர்தல் நடுநிலையாக நடைபெற ஒய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில், தேர்தல் நடக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூரில் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் பதவி காலியாக இருக்கும் நிலையில், தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தலில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவியினை திமுக தக்க வைத்தது. இந்நிலையில் மொத்தமுள்ள 12 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்களில் 8 இடங்கள் அதிமுகவும், 4 இடங்கள் திமுகவும் இடம்பெற்றிருந்த நிலையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அதிமுகவினை சார்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் உள்ள நிலையில், காலியாக உள்ள துணை தலைவர் பதவியினை திமுக தட்டிப்பறிக்க நினைப்பதாக நேற்று, கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாவட்ட திட்ட இயக்குநர் ஆகியோரிடம் புகார் தெரிவித்த நிலையில், இன்று தேர்தல் நடைபெறும் என்றும் அதில் திமுக வினை சார்ந்தவர் தான் துணை தலைவர் என்றும் அதிரடியாக திமுக களமிறங்கியது.

இந்நிலையில், மொத்தமுள்ள 12 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்களும் மினிட் நோட்டில் கையெப்பம் வாங்கி கொண்டு தேர்தல் நடத்தாமல் அப்படியே விட்டு விட்டு தேர்தல் அதிகாரி வாகனத்தில் ஏறி செல்ல முயன்றுள்ளார். இந்நிலையில், அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் காரணம் கேட்டு வாதிட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் அதிகாரியின் வாகனத்தினை மறித்ததாக கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தலைமையிலான போலீசார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் 8 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்களையும் சேர்த்து மொத்தம் 100 க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்து, திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் அங்கு குடிக்க குடிநீர் வசதி இல்லாமல், திருமண மண்டபம் மூடப்பட்ட நிலையில், மண் தரையில் அமர்ந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் மட்டுமில்லாமல் கைது செய்யப்பட்ட ஒட்டு மொத்த அதிமுகவினர்களுக்கு எந்த வித வசதியும் செய்து தரவில்லை, இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கைதினை கண்டித்து கரூர் வெள்ளியணை வழியாக திண்டுக்கல் செல்லும் சாலையில் அதிமுக வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரமாக சாலைமறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் மூன்று பெண்களை மட்டும் கைது செய்து வேனில் ஏற்றியது. இந்நிலையில், கரூர் மாவட்ட பாஜக தலைவர் சிவசாமி தலைமையில் அங்கு வந்த பாஜகவினரையும் முன்னாள் அமைச்சரை சந்திக்க விடவில்லை. அதிமுகவினர் யாரையும் சந்திக்க விடாத காவல்துறையினர் மேலிடத்து உத்திரவு என்று பேச்சு வாக்கில் கூறி சென்றது.

மதியம் கைது செய்யப்பட்ட அதிமுகவினர் மற்றும் முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோரை என்ன காரணத்திற்காக கைது செய்தது என்று கூறாமலே அழைக்கழித்துள்ளது. முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் தேர்தல் அதிகாரியிடம் நடைபெற்ற வாக்குவாதத்தில் மூத்த வழக்கறிஞர்களையும், செய்தியாளர்களையும் போலீஸார் தாக்கியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட அளவில் இந்த ஒரு அராஜக செயல் இதுவரை நடைபெற வில்லை என்றும், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திமுக கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ளார் என்றும்,

தேர்தல் நடுநிலையாக நடைபெற ஒய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில், தேர்தல் நடக்க வேண்டுமென்றும், இதற்காக, மதுரை உயர்நீதிமன்ற நீதிமன்றத்தினை நாட உள்ளதாகவும், 100 நாள் வேலை செய்பவர்களை மிரட்டி தங்களுக்கு வாக்களிக்குமாறு மிரட்டுகின்றனர். தேர்தல் வேலையினை செய்யுமாறும் மிரட்டுகின்றனர். இது ஒரு அராஜக ஆட்சி என்றும் காவல்துறை திமுக வின் ஏவல் துறையாக செயல்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

Views: - 252

0

0