சாலையோரத்தில் இருந்த இரும்பு தூணில் மோதிய கார் : புதுமணத் தம்பதி பலி!!

24 September 2020, 3:19 pm
Karur Car Accident -updatenews360
Quick Share

கரூர் : காரில் சென்ற புதுமண தம்பதியினர் சாலை ஓரத்தில் இருந்த இரும்பு தூணில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மணி என்பவரின் மகன் சந்தோஷ் (வயது 26). இவர் மதுரை அலங்காநல்லூரில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (வயது 21) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

நேற்று இரவு இவர்கள் மதுரையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி இன்னோவா காரில் சென்றனர். காரை சந்தோஷ் ஓட்டி வந்துள்ளார். கரூர் மாவட்டம் சேலம் தேசிய நெடுஞ்சாலை தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரி அருகே வரும் பொழுது சாலையோரத்தில் இருந்த அறிவிப்பு பலகை தாங்கியிருந்த இரும்பு தூண் மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ் மற்றும் மகாலட்சுமி பரிதாபமாக உயிரிந்தனர். இருவரது உடலை மீட்ட போலீசார், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் காரின் பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்த 2 சிலிண்டர்கள் எதிர்பாராதவிதமாக இவர்கள் இருவரின் தலைப்பகுதியில் வேகமாக மோதியதில் தம்பதி இருவரின் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.