ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு ரூ.1 கோடி பரிசு : தோல்வியடைந்த சுயேட்சையின் விநோத அறிவிப்பு

Author: Babu Lakshmanan
5 March 2022, 6:04 pm

கரூர் : ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் நேர்மையான முறையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக விண்ணப்பிக்கும் கவுன்சிலர்களுக்கு ரூ.1 கோடி மற்றும் பாராட்டு விழா நடத்தப்போவதாக கரூர் சுயேட்சை வேட்பாளர் அறிவித்துள்ளார்.

கரூர் மாநகராட்சியின் தேர்தல் முடிவுகள் பல்வேறு அரசியல் கட்சியினரை கதிகளங்க வைத்துள்ளது. திமுக தான் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக போட்டி வேட்பாளர்கள் களமிறங்கி அதிர்ச்சி கொடுத்தனர்.

இப்படி ஏராளமான விஷயங்கள் நடந்த நிலையில், இந்த மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு தோற்ற வேட்பாளர் ஒருவர் நேர்மையான முறையில் ஜெயித்த மாமன்ற உறுப்பினர்களுக்கு ரூ 1 கோடி என்று அறிவித்துள்ளார். கரூர் மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் ரூ.1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா என்று குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஏற்கனவே நகரமைப்பு தேர்தலில் 26 வது வார்டு கவுன்சிலராக போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரும், சமூக நல ஆர்வலருமான ராஜேஸ்கண்ணன் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில், கரூர் மாநகராட்சியில் ஒட்டுக்கு பணம் கொடுக்காமல் நேர்மையான முறையில் தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்களுக்கு ஒரு கோடி பரிசு மற்றும் காமராஜபுரம் பகுதியில் 7ம் தேதி பாராட்டு விழா நடப்பதாகவும், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மார்ச் 5 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சுயேட்சை வேட்பாளர் ராஜேஸ் கண்ணா கூறியதாவது :- கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தேர்தலில் சுயேட்சைகளில் அதிகமாக வாக்குகள் வாங்கியது நான் தான். இருப்பினும் ஜனநாயக முறைப்படிதான் இந்த தேர்தல் நடந்தது என்றால், நேர்மையான முறையில் வெற்றி பெற்றவர்களை கெளரவிக்க வேண்டியது நமது கடமை.

ஆகவே வரும் 7 ம் தேதி, இந்த மாமன்ற உறுப்பினர் தேர்தலில் வாக்காளர்களுக்கு எதுவுமே கொடுக்காமல்தான், நாங்கள் ஜெயித்தோம் என்றும், வாக்காளர்களின் ஆதரவில் தான் நாங்கள் ஜெயித்தோம் என்று கூறும் மாமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்துள்ளோம். இதன் மூலம், மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள். அதற்கான எனது ஒரு முயற்சி தான், என்று அவர் தெரிவித்தார்.   

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?