தடையை மீறி சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது : சேவல்கள் மற்றும் 18 பைக்குகள் பறிமுதல்..!!

20 April 2021, 7:25 pm
rooster fight - updatenews360
Quick Share

கரூர் : தடையை மீறி கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்திய 5 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 18 பைக்குகளையும் பறிமுதல் செய்த போலீஸார், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் சேவல் கட்டு என்கிற சேவல் சண்டை நடத்த மாவட்ட காவல் துறை தடை விதித்துள்ளது. ஆனால், அந்த தடையை மீறி, பலரும் அவ்வபோது சேவல் சண்டை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் திருக்கண்மாலீஸ்வரர் கோவில் அருகே காவிரி ஆற்றில் சிலர் பணம் வைத்து சூதாடி, சேவல் சண்டை நடத்துவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்திருக்கிறது.

அதன்பேரில், மாயனூர் காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு சேவல் சண்டை நடத்தியவர்கள், போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து, போலீஸார் அங்கிருந்த 18 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

அதோடு, தடையை மீறி சேவல் சண்டை நடத்தியதாக சித்தலவாய் கிழக்கு காலனி பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ், பொய்கை புத்தூரைச் சேர்ந்த மருதுபாண்டியன், கரூர் தவுட்டுப்பாளையத்தை சேர்ந்த மலையப்பன், வளையபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன், குளித்தலையைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய ஐந்து பேர்களை, மாயனூர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

அப்படி கைது செய்யப்பட்ட 5 பேர்களையும் கிருஷ்ணராயபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கரூர் கிளை சிறையில் அடைத்தனர். சேவல் சண்டை நடத்தி இளைஞர்கள் கைதான சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Views: - 82

0

0