சார், அந்த மாணவி தற்கொலை விவகாரம்… கொரோனா விழிப்புணர்வு பற்றி மட்டும் பேசுங்க : கரூர் எஸ்பி மழுப்பல்..!!

Author: Babu Lakshmanan
4 January 2022, 6:05 pm
Quick Share

கரூர் : கரூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கு குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கரூர் எஸ்.பி சுந்தரவடிவேலு மழுப்பலான பதிலை தெரிவித்தது அங்கிருந்தவர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, தமிழகத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் விதித்த அன்றே, ஜனவரி 1 புத்தாண்டிற்காக, டிசம்பர் மாதம் 31 ம் தேதி நள்ளிரவு நடுரோட்டினை மறைத்து சாமியானா பந்தல் போட்டு, பெரிய அளவில் கேக் வெட்டி அதிலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலு தலைமையில் காவல்துறையினர் கொண்டாடினர்.

இந்நிலையில், அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் பெரிதளவில் வைரலாகி வரும் நிலையில், இன்று தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு மற்றும் மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும், வாகன ஒட்டிகளுக்கு முகவசம் வழங்கினர். ஒரு சிலர், மதுவினை ஆய்வு செய்யும் கருவியாக இருக்கும் என்று ஊத முற்பட்டனர். பின்னர் முகத்தினை தேடி, மாவட்ட எஸ்.பி யே காதில் முகக்கவசமான பேஸ்மாஸ்க்கினை மாட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் தொடர்ந்து அனைவரையும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும் இருசக்கரம் மற்றும் பாதசாரிகளிடையே விழிப்புணர்வினையும் ஏற்படுத்தினார்.

இதனையடுத்து கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது :- கோவிட் 19 மறு உருவமாக ஒமிக்ரான் பரவலை தடுக்கும் விதமாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், பொதுமக்கள் அதிகளவில் கூட வேண்டாம். உணவகம், திருமண மண்டபம், மார்க்கெட், ஜவுளிகடைகளில் அதிக கூட்டம் சேரக்கூடாது.

ஆகவே பொதுமக்கள் இந்த விழிப்புணர்வினை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றதோடு, முதல்பட்சமாக, முகக்கவசம் அணியாதவர்களிடையே அன்பாக சொல்லி அணிய வேண்டுமென்று அறிவுறுத்துவோம். பின்னர் அபராதம், தண்டனை குறித்தும் ஆலோசித்து வருகின்றோம். பொதுமக்களிடையே சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

பின்னர், தனியார் பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பாக தற்போது என்ன நிலை என்று கேள்வி கேட்டதற்கு, போதும், தற்போது கொரோனா விழிப்புணர்வு குறித்து மட்டும் பேசுவோம் என்றார்.

தமிழக அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய தனியார் பள்ளி மாணவியின் தற்கொலை சம்பந்தமாக காவல்துறை ஆய்வாளார் காத்திருப்பு பட்டியல் வைக்கப்பட்டு, பல்வேறு அரசியல் தலைவர்கள் பேட்டிக்கு பின்னர் காவல்துறை ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, மாணவி தற்கொலை விவகாரத்திற்கு என்று தனி அதிகாரிகள் நியமித்து, பல்வேறு தனிப்படைகளும் அமைக்கப்பட்டு, அந்த மாணவியின் உயிரிழப்பினை தொடர்ந்து அதே பள்ளியின் ஆசிரியரும் தற்கொலை என்று சென்ற வருடம் இறுதியில் தமிழக அளவில் விறுவிறுப்பாக பேசப்பட்டது.

அரசியலாக்கப்பட்ட பள்ளி மாணவியின் தற்கொலை, இன்றும் கிணற்றில் போடப்பட்ட கல் போல உள்ளதாகவும், காவல்துறை துறைரீதியான தகவலை வெளியிட வேண்டுமென்கின்றனர் நடுநிலையாளர்களும், சமூக நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 439

0

0