ரூ.54 லட்சம் கடன் வாங்கி தலைமறைவானவருக்கு கத்திக்குத்து : காரில் கடத்திய கேரள கும்பல் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2021, 11:12 am
Kerala Gang Arrest - Updatenews360
Quick Share

கோவை : கேரளாவில் கடன் வாங்கிவிட்டு தப்பி வந்து கோவையில் இருந்தவரை காரில் கடத்தி கத்தியால் குத்திய கேரளாவைச் சேர்ந்த 5 பேரை பெரியநாயக்கன்பாளையம் போலிசார் கைது செய்து விசாரணை. தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் முகம்மது சாஜி. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன் முகம்மது சபீர் என்பவரிடம் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறி ரூ.54 லட்சம் கடனாக பெற்று விட்டு அங்கிருந்து தலை மறைவாகியுள்ளார்.

இதையடுத்து முகம்மது சாஜி மீது கேரளாவில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடன் கொடுத்த முகம்மது சபீர் தனது நண்பர்கள் மூலம் கடந்த 3 வருடமாக சாஜியை தேடி வந்துள்ளார்.

இந்நிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் முகம்மது சாஜி இருப்பதை அறிந்து முகம்மது சபீர் தனது நண்பர்கள் 7 பேருடன் கேரளாவில் இருந்து காரில் கோவை வந்து முகம்மது சாஜியை தேடியுள்ளனர்.

நேற்று காலை பெரியநாயக்கன்பாளையத்தில் வைத்து முகம்மது சாஜியை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அனைத்து காவல் நிலையங்களையும் உஷார் செய்த போலீசார், காரமடை பகுதியில் வாகன சோதனையில் இவர்களது காரை மடக்கி சோதனை செய்த போது அதில் கடத்தப்பட்ட முகம்மது சாஜி, முகம்மது சபீர், ஜினு, ராகிஷ் ஆனந்த், ஜாவித் ஆகியோர் இருந்துள்ளனர்.

அவர்களை கைது செய்த போலீசார் கை மற்றும் காலில் காயத்துடன் இருந்த முகம்மது சாஜியை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களிடம் இருந்து 2 கார்களை பறிமுதல் செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய இவர்களது நண்பர்களான டான் தாமஸ், ஹாரிஸ், ஆரிப் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

Views: - 334

0

0