டாஸ்மாக் கடையில் கள்ள ரூபாய் நோட்டு கொடுத்து மதுவாங்க முயற்சி : கேரள வாலிபர் கைது!!

6 July 2021, 3:49 pm
Fake Rupees Arrest - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடையில் கள்ள நோட்டை கொடுத்து மதுபானம் வாங்க முயன்ற கேரளாவை சேர்ந்தவரை கைது செய்த போலீசார் ₹3500 மதிப்பிலான போலி 500 ருபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தமிழக கேரள எல்லை பகுதியான ஊரம்பு பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் சுமார் 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மதுபானம் வாங்க வந்துள்ளார். அந்த நபர் கடையில் இருந்த ஊழியரிடம் ஒரு 500 ரூபாய் நோட்டை கொடுத்து குவாட்டர் பாட்டில் ஒன்றை கேட்டுள்ளார்.

உடனே ஊழியர் நோட்டை வாங்கி வைத்து கொண்டு மதுபாட்டிலை எடுத்து கொடுக்க முயலுகையில் அந்த பணம் போலியென தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் அந்த நபரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து கொல்லங்கோடு காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அங்கு போலீசார் அவரது உடமைகளை சோதனை செய்த போது பேன்ட் பாக்கெட்டில் ஒரே வரிசை எண் கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் 7 இருந்துள்ளன. இதனை தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் கேரள மாநிலம் பொழியூர் பகுதியை சேர்ந்த பைஜு (வயது 32 )என்றும் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததாகவும் தற்போது கொரோனா காரணமாக திரும்ப வெளிநாட்டிற்கு செல்ல முடியாத நிலை இருந்து வருவதால் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த போலி ரூபாய் நோட்டுகளை பல கடைகளில் கொடுத்து சிறிய வகை பொருட்கள் வாங்கி மீதம் கிடைக்கும் சில்லறையை நல்ல நோட்டாக மாற்றி கொள்வதாக தெரிவித்தார். இதனையடுத்து கொல்லங்கோடு போலீசார் பைஜுவை கைது செய்து அவர் வைத்திருந்த 3500 ரூபாய் போலி நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்

Views: - 264

0

0