கிசான் திட்ட முறைகேடு வழக்கு : 3 ஒப்பந்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை – ஆட்சியர் தகவல்

8 September 2020, 2:13 pm
cuddalore collector 1 - updatenews360
Quick Share

கடலூர் : விவசாயிகளுக்கான கிசான் திட்ட முறைகேடு விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 3 ஒப்பந்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மானியத் தொகையை, 3 தவணைகளாக பிரித்து வழங்கப்படுகிறது. இந்தத் தொகை, சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நேரடியாக, அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, மத்திய அரசின் இந்த மானியத்தை பெற்றுத் தருவதாகக் கூறி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மோசடி நடைபெற்றது அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் அதிகம் மோசடி நடந்ததாக கூறப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் மட்டும் 10,700 பேர் விவசாயிகள் என போலியாக கணக்கு காட்டி, ரூ.4 கோடி வரை மோசடி செய்திருப்பது அம்பலமானது. இதையடுத்து, அந்த வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டன. இதேபோல, கடலூரில் விவசாயிகளின் பெயரில் மோசடி செய்யப்பட்ட ரூ.4.20 கோடியும், விழுப்புரத்தில் ரூ.4.50 கோடியும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டதாக கடலூரில் 3 ஒப்பந்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி தெரிவித்துள்ளார். மேலும், உண்மையான பயனாளர்களின் வங்கி கணக்குகள் எதுவும் முடக்கப்படவில்லை என்றும் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விரிவாக விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Views: - 0

0

0