கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 5 பேரிடம் கோவையில் விசாரணை..!!

Author: Aarthi Sivakumar
8 January 2022, 3:33 pm
Quick Share

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் இன்று 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக எஸ்டேட் உள்ளது. இங்குள்ள பங்களாவில், கடந்த 2017ம் ஆண்டு காவலாளியை கொலை செய்து, கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் சயோன், மனோஜ், திபு, ஜித்தின் ஜாய் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தனிப்படைகள் அமைக்கப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் சிலர் அடுத்தடுத்து மரணமடைந்ததால் இந்த வழக்கில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக 80க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த கொலை, கொள்ளை வழக்கில் 4வது குற்றவாளியான திபுவிடம் நேற்று முன்தினம் கோவை பிஆர்எஸ் மைதானத்தில் விசாரணை நடைபெற்றது. இரவு வரை சுமார் 11 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. அதில் இந்த கொலை, கொள்ளை வழக்கில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? ஆவணங்கள் யாரிடம் கொடுக்கப்பட்டது? யார் திட்டம் தீட்டியது? என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இந்த கொலை கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட திபு, ஜம்ஷீர் அலி, சதீஸன், பிஜின் குட்டி, ஜிதின் ஜாய் ஆகிய 5 பேரிடம் கோவை பிஆர்எஸ் மைதானத்தில் ஐஜி சுதாகர் தலைமையில் போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையின் முடிவில் இந்த வழக்கின் நிலை அடுத்த கட்டத்துக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த வழக்கு தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கிடம் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் சில நாட்களுக்கு முன்பு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Views: - 269

0

0