மகனை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கும்பல் : பதறியடித்து காப்பற்றச் சென்ற தாய்க்கும் அடிஉதை..!!

By: Babu
15 September 2021, 12:52 pm
kumari attack - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டவரை காப்பற்றச் சென்ற தாயுக்கும் அடி உதை விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூதப்பாண்டி அருகே உள்ள அழகிய பாண்டியபுரம் புதூரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது 18 வயது மகன் சில மாதங்களுக்கு முன்பு மேலபுதூரை சேர்ந்த பிராண்ட் எல்டின் என்பவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை திருடியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பிராண்டின் மற்றும் எட்டாமடையைச் சேர்ந்த கில்பர்ட், ரஜினி, விஜி, தடிக்காரண்கோணத்தை சேர்ந்த நோன்பில், நாகர்கோவில் வடசேரி சேர்ந்த நிரோசன் ஆகிய 6 பேரும் சேர்ந்து ராஜேஸ்வரி வீட்டுக்கு சென்று அவரது மகனை மரத்தில் கட்டிவைத்து அடித்ததாக கூறப்படுகிறது.

இதனை தடுக்க சென்ற ராஜேஸ்வரியையும் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கேசவன்புதூர் மேலப்புதூர் பகுதியை சேர்ந்த சரோஜா என்பவர், ஸ்டீபன், ராஜேஸ்வரி ஆகிய 3 பேரும் சேர்ந்து தன்னை தாக்கியதாக பூதப்பாண்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குற்றம் செய்பவர்களை தண்டிக்க காவல்துறையும், நீதிமன்றமும் இருப்பதை மறந்து, குண்டர்களை போல வீடு தேடிச் சென்று வாலிபர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 284

0

0

Leave a Reply