மனநலம் பாதித்த பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய பெண் போலீஸ்… பலாத்காரம் செய்தவனையும் கைது செய்து அதிரடி… குவியும் பாராட்டு..!!

Author: Babu Lakshmanan
1 September 2021, 10:19 am
kumbakonam arrest - updatenews360
Quick Share

தஞ்சை : கும்பகோணம் அருகே மனநலம் பாதித்த பெண்ணின் பிரசவத்திற்கு உதவியதோடு, அவரை பலாத்காரம் செய்த நபரையும் கைது செய்த பெண் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கும்பகோணம் பொற்றாமரை குளத்தின் கிழக்கு கரையில் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 35 வயதுடைய பெண் ஒருவர் அங்கேயே தங்கியுள்ளார். அவர் யாரிடம் பேசாமலும், யாசகமும் பெறாமலும், எவருக்கும் தொந்தரவு ஏதும் செய்யாமல் அங்கேயே இருந்துள்ளார். யாராவது அவருக்கு உணவு கொடுத்தால் மட்டுமே வாங்கி சாப்பிடுவார்.

இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். பெரிய நைட்டி மட்டுமே அணிந்திருந்தால் அவர் கர்ப்பமாக இருந்தது வெளியே தெரியவில்லை. இதையடுத்து நேற்று காலை பொற்றாமரை குளத்தின் கிழக்கு கரைக்கு மேற்கு காவல் நிலையத்தின் முதல்நிலை தலைமை காவலர் சுகுனா என்பவர் ஏதேச்சையாக சென்றபோது, அங்கு மனநலம்பாதிக்கப்பட்ட பெண் சுவரில் சாய்ந்து கொண்டு முனகி கொண்டிருந்தார்.

அவர் பிரசவ வலியால் துடிப்பதை உணர்ந்த சுகுனா, உடனடியாக அருகில் சென்று பார்த்த போது, அவருக்கு ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. உடனடியாக மேற்கு காவல் நிலையத்துக்கு வந்து அங்கிருந்த சில பெண் காவலர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டும், அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு உடனடியாக அங்கு சென்று பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு முதலுதவி செய்தனர்.

அப்போது, அந்த பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்து தரையில் கிடந்துள்ளது. பின்னர் மேற்கு காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் பேபி, காவல் நிலையத்தில் வைத்திருந்த தன்னுடைய இரண்டு சேலைகளை கொண்டு வந்து அந்த பெண் மீது போர்த்தி அவரை பாதுகாத்தார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்த பெண்கள் வந்து பிரசவித்த அந்த பெண்ணுக்கு செய்யவேண்டியவற்றை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக சேர்த்தனர். மேலும் அப்பெண்ணிற்கு உதவியாக இரண்டு பெண் காவலர்களையும் காவல் ஆய்வாளர் அனுப்பி வைத்தார். மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பதால், அந்த பெண்ணிடமிருந்து எந்தவித தகவலையும் பெறமுடியவில்லை. இதுகுறித்து காவல் ஆய்வாளர் பேபி தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியாவுக்கு தகவல் கொடுத்தார்.

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பிரசவம் நடந்த இடம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், மேற்கு காவல் நிலையத்தின் பெண் காவலர்கள் அனைவரும் அங்கு சென்று அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் காப்பாற்றியதை கேட்டு எஸ்பி ரவளிப்பிரியா பாராட்டினர்.

மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட பெண், குழந்தை பெற காரணமாக இருந்த படுபாதகனை போலீஸார் தேடி வந்தனர். இந்த பெண் ஒரே இடத்தில் இருந்ததால் யார் அப்பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கியது என அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, பாலக்கரையைச் சேர்ந்தவர் ஒருவர் அடிக்கடி வந்து அப்பெண்ணை சந்தித்தது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று நள்ளிரவு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பாலக்கரைக்கு சென்று அங்கிருந்த ஜான் (40) என்பவரை பிடித்து விசாரித்த போது, அவர் இந்த பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்து, கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

ஆதரவற்ற பெண்ணுக்கு மனிதாபிமானத்தோடு பிரசவம் பார்த்ததும், உடனடியாக குற்றவாளியை கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி, அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுபாஷினி, பெண்ணுக்கு பிரசவம் பார்க்க உதவியாக இருந்த பெண் தலைமை காவலர் சரிதா, முதல் நிலை பெண் காவலர் சுகுனா ஆகியோரை இன்று தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஸ்குமார் தன்னுடைய அலுவலகத்துக்கு வரவழைத்து வெகுவாக பாராட்டி, பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

Views: - 456

0

1