கும்பகோணம் பள்ளி தீவிபத்து தினத்தை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் : குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் கோரிக்கை

16 July 2021, 12:44 pm
kumbakonam death1 - updatenews360
Quick Share

கும்பகோணம் : கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 17ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பள்ளி முன்பு வைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு முன்பு பெற்றோர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீ கிருஷ்ணா தனியார் பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியாகினர். 18 குழந்தைகள் படுகாயம் அடைந்து இன்றளவும் அதன் பாதிப்பிலிருந்து மீளாமல் உள்ளனர்.

நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தில் 17ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தீ விபத்து நடந்த பள்ளி முன்பு வைக்கப்பட்டுள்ள இறந்த 94 குழந்தைகளின் புகைப்படங்களுக்கு முன்பு பெற்றோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் குழந்தைகளுக்கு பிடித்த தின்பண்டங்கள், புத்தாடைகளை வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து கும்பகோணம் பழைய பாலக்கரையில் தமிழக அரசு சார்பில் இறந்த 94 குழந்தைகளின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபி மற்றும் குழந்தைகளின் கல்லறைகளில் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் இங்கும் மற்றும் திமுக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் ஏராளமானோர் கனத்த இதயத்தோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் கடந்த 17 ஆண்டுகளாக ஜூலை 16ம் தேதி கும்பகோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகள் நினைவு தினத்தை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதாகவும், தற்போது உள்ள தமிழக அரசு இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் அதனை அறிவிக்க வேண்டும் என குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் தெரிவித்தனர்.

Views: - 100

0

0

Leave a Reply