“ஆஸ்கர் விருது வெல்லும்” அடித்து சொன்ன பிரபல இயக்குனர்.. வருங்கால இயக்குனர்களே நோட் பண்ணிக்கங்க..!

Author: Rajesh
8 May 2022, 1:05 pm

மதுரையின் வரலாறுகளைப் பற்றி எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய ‘தூங்காநகர நினைவுகள்’ நூல் அறிமுக விழா மதுரையில் நடந்தது. விழாவில் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், மிஷ்கின், பேராசிரியர் சுந்தர் காளி, எழுத்தாளர் ஷாஜகான், பேராசிரியர் பிரபாகர், ஊடகவியலாளர் விஜயானந்த் ஆகியோர் பங்கேற்று நூலை அறிமுகம் செய்தனர்.

அப்போது, பேசிய இயக்குநர் மிஷ்கின்.. ‘சித்திரம்பேசுதடி படம் வெளியான பின்னர் மதுரையின் சாலை ஒன்றில் நின்று கொண்டிருக்கையில், என்னைப் பார்த்து ஒருவர் ஒழுங்கா படம் எடு என எச்சரித்து விட்டுப் போனார். என்னுடைய முதல் ரசிகர் மதுரைக்காரர் தான் என்றார்.

தூங்காநகர நினைவுகள் நூல் அறிமுக விழாவுக்கு முன்னதாக கீழடி அகழாய்வு நடைபெறும் இடத்தையும், சமணர் மலையையும் பார்த்தேன். மனம் இது போதும் என்றளவுக்கு நிறைவாக இருந்தது. மதுரையை பற்றிய ஒரு எளிமையான அறிமுகத்தை இந்த நூல் வழங்குகிறது. இந்த நூலில், தாது வருட பஞ்சத்தின் போது மதுரை மக்களின் பசியைப் போக்கிய குஞ்சரத்தம்மாள் பற்றிய பகுதி போதும். இது ஒரு சிறந்த நூல் என சொல்வதற்கு.

தன்னுடைய சொத்தை எல்லாம் செலவழித்து கஞ்சி ஆக்கிய போது எழுந்த புகை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை தாண்டி உயர்ந்து நின்றது என்ற வரிகளுக்காகவே முத்துக்கிருஷ்ணனை கொண்டாடலாம். உலகத்தில் எங்கெல்லாம் ஒரு பெண் நல்லது செய்கிறாளோ அவர்கள் எல்லோருமே குஞ்சரத்தம்மாள் தான். குஞ்சரத்தம்மாள் கதையை படமாக எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்தக் கதை ஆஸ்கார் வாங்கும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டார்.

பின்னர், கீழடி அகழாய்வு பணிகளில் ஈடுபட்ட பெண்களையும், அ.முத்துக்கிருஷ்ணனின் தாயாரையும் பெருமைப்படுத்த விரும்புவதாக தெரிவித்த மிஷ்கின், அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்வித்தார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?