குறுவை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டும் விவசாயிகள்..! 30 ஆண்டுகளில் புதிய உச்சம்..!
4 August 2020, 11:41 amஇந்த ஆண்டின் குறுகிய கால குறுவை சாகுபடி பருவத்தில் இந்த ஆண்டு 3.87 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயப் பணிகள் நடந்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் குறுவை சாகுபடி பரப்பளவில் இதுவே மிகப்பெரியது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டு குறுவை சாகுபடியை விட சுமார் ஒரு லட்சம் ஏக்கர் அதிகம். 2019’ஆம் ஆண்டு இதே நாளில் (ஆகஸ்ட் 3) 2.803 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யப்பட்டதாக, தமிழக அரசின் முதன்மை வேளாண் செயலாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் வேளாண் இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் மேலும் 270 வருவாய் கிராமங்கள் இந்த முறை பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.
காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் மொத்த சாகுபடி பரப்பளவு 1.68 லட்சம் ஏக்கர் கொண்டுவரப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 1.03 லட்சம் ஏக்கர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளதால், நடப்பு குறுவை சாகுபடி பருவத்தில் டெல்டா மாவட்டங்களில் சுமார் 6.5 லட்சம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.