காணாமல் போன கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகள் : 10 ஆண்டுகளாக தேடும் கிராம மக்கள்!!

18 September 2020, 2:12 pm
Water Missed - updatenews360
Quick Share

தூத்துக்குடி : காணமால் போன 5 கண்மாய்கள் மற்றும் 400 ஏக்கர் பரப்பளவு உள்ள நீர்நிலைகள் 10 ஆண்டுகளாக தேடிவரும் மக்கள் குறித்த செய்தியை இந்தி பதிவில் காணலாம்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி வேம்பார். மீன்பிடித்தொழில், பனை சார்ந்த தொழில் மற்றும் விவசாயம் என முப்பரிமணம் கொண்ட பகுதி. வேம்பார் கிராமத்தின் முகப்பு மற்றும் முடிவில் இருக்கும் வேம்பார் ஆற்று நீரோடைகள் மூலமாக வேம்பார் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 40கிராமங்களுக்கு குடிநீர் ஆதராம் பெற்று வந்தன.

இந்த ஆற்று நீரோடைகள் கடல்கரை அருகில் இருப்பதால் கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்த நீரோடை பகுதிகள் மற்றும் அதன் அருகில் கண்மாய்களை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து உப்பளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு தொடங்கியது முதல் அப்பகுதி மக்கள் அரசிடம் மனு, போராட்டம், நீதிமன்றம் என பல கட்ட முயற்சிகள் எடுத்து வந்தாலும், ஆக்கிரமிப்பு பணிகள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

இதன் காரணமாக நீரோடைகள் மற்றும் கண்மாய்கள் என சுமார் 400 ஏக்கர் வரை காணமால் போய்விட்டதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இப்பகுதியில் இருந்த 7 கண்மாய்களில் தம்பக்காரன்பிள்ளை ஊரணி – 1மற்றும் 2, துணைமலைக்குளம், சிவராமபேரி, ராமராயபுரம் ஆகிய 5 கண்மாய்கள் முற்றிலுமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உப்பளங்களாக மாற்றியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மக்களின் புகாரை தொடர்ந்து கடந்த 2013ம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு செய்து நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து 3 உப்பளங்கள் இருப்பதாக அறிக்கையும் கொடுத்தது. ஆனால் அதன் பின்னரும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் இன்று முற்றிலுமாக நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அரசு சார்பில் ஒரு போர்டை மட்டும் வைத்து விட்டு சென்றுவிட்டனர். ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மாவட்ட நிர்வாகம் சார்பில் எவ்வித ஆக்கிரமிப்பு இல்லை, உப்பளங்கள் இல்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

கடந்த2016ம் ஆண்டு உப்பளம் இருப்பதற்கான ஆதாரங்களை மனுதாரர் தாலூகா அலுவலகத்தில் அளிக்க வேண்டும், குழு அமைத்து இந்த ஆதாரங்களை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையெடுத்து தகவல் அறியும் உரிமம் சட்டம் மூலமாக உப்பளங்கள் இருப்பதும், அந்த உப்பளங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இது குறித்த ஆதாரங்களை சேகரித்து தாசில்தார், மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்த பின்னரும் எவ்வித ஆக்கிரமிப்புகளையும் அகற்றவில்லை என்றும், பெயரளவிற்கு குழு அமைத்துள்ளதாகவும், எவ்வித நடவடிக்கை இல்லை என்றும், இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து உப்பளங்களை அமைத்து வருவதாகவும், இதன் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு குடிநீர் விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமின்றி சுமார் 18கோடி ரூபாய் மதிப்பில் வேம்பார் மற்றும் பெரியசாமிபுரம் பகுதியி;ல தடுப்பு அணை கட்டுப்பட்டுவருவதாகவும், இந்த தடுப்பு அணையும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்த போது மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும், நீதிமன்றம் சென்றும் எவ்வித நடவடிக்கை இல்லை என்றும், தனியார் நிறுவனங்கள் நீரோடை அருகில் சில ஏக்கர் நிலங்களை விலைக்கு வாங்கி கொண்டு, அருகில் உள்ள நீரோடைகளை ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டும் குறைந்து வருவதாகவும், கடந்த காலம் வரை தென்னை, நிலக்கடலை, நெல் போன்ற விவசாயம் செய்து வந்த நிலையில் உப்பளத்தினால் விவசாயம் முற்றிலுமாக அழிந்து விட்டதாகவும், 10 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி வருவதாகவும், 5 ஆட்சியர்கள் , 10 தாசில்தார்கள் மாறிதான் உள்ளனர் தவிர எவ்வித நடவடிக்கையும் இல்லை, பொதுப்பணித்துறை மூலமாக இடங்கள் அளவீடு செய்யும் பணிகளை செய்தாலும், அவர்களும் இடங்களை அளவீடு செய்யமுடியமால் தவித்து வருவதாக கூறுகிறார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த குணசேகரன்

வேம்பார் ஆற்று பகுதியினால் பல கிராமங்கள் குடிநீர்வசதி பெற்று வந்த நிலையில் ஆக்கிரமிப்பு காரணமாக குடிநீர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, தங்களுடைய வாழ்வாதரம் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் உள்ளனர். அரசு விரைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி காணமால் போன கண்மாய்களையும், நீரோடைகளை மீட்க வேண்டும். இல்லையென்றால் ஊரை காலி செய்வதை தவிர வேறு வழியில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

Views: - 13

0

0