ரூ.229 கோடி மதிப்பு… அதிமுக எம்எல்ஏ, மாவட்ட பாஜக தலைவரின் நிலங்கள் மீட்பு ; வருவாய் துறை அதிரடி.. கோவையில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
26 September 2023, 7:19 pm
Quick Share

கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி, அதிமுக எம்எல்ஏ ஜெயராம் ஆகியோருக்கு சொந்தமான ரூ.229 கோடி மதிப்பிலான உபரி நிலங்களை வருவாய் துறை அதிகாரிகள் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1957ல் கொண்டு வரப்பட்ட நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் குடும்பத்தில் உள்ள தனி நபர் ஒருவர் அதிகபட்சம் 15 ஏக்கர் வைத்துக் கொள்ளலாம். மேலும், ஒரு குடும்பத்தில் இரு வாரிசுகள், மனைவி மற்றும் கணவன் என்று இருந்தால், குடும்பத் தலைவரைத் தவிர்த்து மனைவிக்கு 5 ஏக்கர், மகனுக்கு 5 ஏக்கர், மகளுக்கு 5 ஏக்கர் என ஒரு குடும்பத்துக்கு மொத்தம் 30 ஏக்கர் மட்டுமே இருக்க வேண்டும். அதற்குமேல் இருந்தால் அவை உபரி நிலமாக கருதப்படும்.

இந்த நிலையில், கோவையில் ரூ.229 கோடி மதிப்பிலான உபரி நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல் சாலை, கொடிசியா அருகே 45.82 ஏக்கர் புஞ்சை நிலங்களை, உபரி நிலங்களாக தமிழ்நாடு நில சீர்திருத்தம் மற்றும் உச்ச வரம்பு சட்டத்தின்படி அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் கடந்த 7ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி, அந்த நிலங்களை மீட்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து, அதற்கான பணியில் கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டனர்.

ரூ.229 கோடி மதிப்பிலான இடங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு, அந்த இடத்தில் அறிவிப்பை பலகையும் நடப்பட்டுள்ளது. கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்பட 23 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும், சிங்காநல்லூர் அதிமுக எம்எல்ஏ ஜெயராம், 20 வீட்டு மனைகளை விற்பனை செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 182

0

0