உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை : கோவையில் இதுவரை 6 இடங்களில் திமுக வெற்றி..!!

Author: Aarthi Sivakumar
12 October 2021, 12:27 pm
Quick Share

கோவை: கோவையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 6 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

கோவையில் கடந்த 9ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம நகராட்சி தலைவர் உள்ளிட்ட 13 பதவிகளுக்காக தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் 55,280 பேர் வாக்களித்தனர்.

இதனைத்தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. அன்னூர், ஆனைமலை, பொள்ளாச்சி தெற்கு, காரமடை ,கிணத்துக்கடவு, மதுக்கரை, பெரிய நாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம், சுல்தான் பேட்டை, குருடம்பாளையம், மாதம்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் குருடம்பாளையம் 9வது வார்டு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி, அங்கு திமுக சார்பில் போட்டியிட்ட அருள் ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவைச் சேர்ந்த வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற்றுள்ளார். அங்கு மொத்தம் 910 வாக்குகள் பதிவாகியுள்ளன.

இத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் கார்த்தி என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கார்த்திக் ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்று பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதேபோல் காளிபாளையம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக 155 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது அதிமுக 98 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

மாதம்பட்டி 3-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிவப்பிரகாசம் 259 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அங்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் ராஜா 190 வாக்குகள் பெற்றுள்ளார்.

மதுக்கரை ஒன்றியம் சீராபாளையம் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுகவை சேர்ந்த முருகேசன் 168 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கிணத்துக்கடவு முத்தூர் வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 381 மொத்த வாக்குகள் உள்ளன. இதில் பதிவானது 288 வாக்குகள். இதில் திமுக ஆதரவு வேட்பாளர் மகேந்திரன் 112 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்குமாரபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 2312 வாக்குகள் பதிவாகின.

இதில் திமுக ஆதரவு வேட்பாளர் நாரயண மூர்த்தி 1451 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக ஆதரவு வேட்பாளர் சரஸ்வதி 834 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். தொடர்ந்து மற்ற பகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Views: - 402

0

0